Published : 16 Jul 2020 05:48 PM
Last Updated : 16 Jul 2020 05:48 PM
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க நாட்றாம்பள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 52 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர் கே.சி.வீரமணி இன்று திறந்து வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 15) வரை கரோனா தொற்றால் 478 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, ஆம்பூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கைச் சூழலுடன் கூடிய சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நாட்றாம்பள்ளி தாலுகா, அக்ரகாரம் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் விடுதி அருகே இயற்கைச் சூழலுடன் கூடிய சித்தா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.
இதற்கான திறப்பு விழா இன்று (ஜூலை 16) காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில், சித்த மருத்துவப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் விக்ரம்குமார் தலைமை வகித்தார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசிகண்ணம்மா வரவேற்றார், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, சித்தா சிறப்பு சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
"திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று குறைவாக உள்ளது. நோய்த் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சித்த மருத்துவ முறைப்படி கரோனாவுக்குச் சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு, 26 அறைகளில் 52 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகள் வழங்கப்பட உள்ளன. இது மட்டுமின்றி மூச்சுப் பயிற்சி, தியானப் பயிற்சி, 8 வடிவில் அமைக்கப்பட்டுள்ள பாதையில் தினமும் நடைப்பயிற்சி, யோகாசனம், மூலிகை மருத்துவம் ஆகியவை வழங்கப்பட உள்ளன.
இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வாய்ப்புள்ளது. சித்த மருத்துவப் பிரிவில் ஆங்கில மருத்துவமும் பார்க்கப்படும்"
இவ்வாறு அமைச்சர் வீரமணி பேசினார்.
சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவில் அளிக்கப்படும் மருத்துவ முறைகள் குறித்து சித்த மருத்துவர் விக்ரம்குமார் பேசும்போது, "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு இயற்கை முறையில் மருத்துவம் அளிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாரத்தில் 7 நாட்களும் மூலிகை சார்ந்த காலை சிற்றுண்டி வழங்கப்படும். அதன்படி, திங்கள்கிழமை வாழைத்தண்டு சூப், தூதுவளை சூப் வழங்கப்படும். செவ்வாய்க்கிழமைகளில் மிளகு சூப், புதன் கிழமைகளில் முடக்கறுத்தான் சூப், வியாழன்கிழமை சத்துமாவு சூப், வெள்ளிக்கிழமையில் நெல்லிக்காய் சூப், எலுமிச்சை சூப், சனிக்கிழமை இஞ்சி ரசம், ஞாயிற்றுக்கிழமைகளில் திணை பாயாசம் வழங்கப்படும்.
மாலையில் முளைகட்டிய பயிறு, கம்பு ரொட்டி, கொள்ளு, பச்சைப் பயிறு, காராமணி சுண்டல், ராகி ரொட்டி, கம்பு லட்டு ஆகியவை ஒவ்வொரு நாள் வழங்கப்படும். மேலும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை முகக்கவசம், வாய் கொப்பளிக்க உப்பு, பல் துலக்க மூலிகை பற்பொடி, வேப்பமரக்குச்சிகள், 30-க்கும் மேற்பட்ட மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட குளியல் பொடி, ஆவி பிடிக்க மூலிகை மருந்து, மண் பானையில் உணவு வகைகள், மண் குவளையில் குடிநீர் ஆகியவை வழங்கப்படும்" என்றார்.
"எப்போதும் சசிகலா எங்களுக்கு எதிரிதான்"
நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் கே.சி. வீரமணியிடம் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா விரைவில் விடுதலை ஆகி வெளியே வர உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "சசிகலா வெளியே வருவது குறித்து அதிகாரபூர்வத் தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், அவர் வெளியே வந்தாலும் எப்போதுமே அவர் எங்களுக்கு (அதிமுக) எதிரிதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுகவை முதல்வரும், துணை முதல்வரும் நல்ல முறையில் வழி நடத்திச்செல்கிறார்கள். அதிமுகவினர் யாரும் சசிகலாவுடன் செல்ல மாட்டார்கள்" எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT