Published : 16 Jul 2020 05:10 PM
Last Updated : 16 Jul 2020 05:10 PM
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கொலை செய்யப்பட்ட ராணுவ வீரரின் மனைவி, தாயார் உடல் அழுகியதால் உறவினர்கள் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் புகார் தெரிவித்தனர்.
காளையார்கோவில் அருகே முடுக்கூரணியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஸ்டீபனின் மனைவி சினேகா, தாயார் ராஜகுமாரி ஆகிய இருவரையும் ஜூலை 14-ம் தேதி கொலை செய்துவிட்டு 75 பவுன் நகைகளை சிலர் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்நிலையில் லடாக்கில் பணிபுரியும் ராணுவ வீரர் ஸ்டீபன் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு சிவகங்கை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன.
ஸ்டீபன் இன்று ஊருக்கு வந்ததையடுத்து மருத்துவமனையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இருவரது உடல்களை எடுத்தபோது அழுகியநிலையில் இருந்தது.
இதனால் உறவினர்கள் அதிருப்தி அடைந்தனர். தொடர்ந்து உடல்களைச் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். அங்கு கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அப்போது ஸ்டீபனின் உறவினர்கள், ‘ அரசு மருத்துவமனையில் குளிர்சாதன இயந்திரம் முறையாக இயங்காததால் உடல்கள் அழுகிவிட்டன. இதுகுறித்து முன்கூட்டியே தெரிவித்திருந்தால், நாங்களே குளிர்சாதன இயந்திரத்திற்கு ஏற்பாடு செய்திருப்போம். ராணுவ வீரரின் குடும்பத்திற்கே இந்தநிலையா?,’ என்று மாவட்ட ஆட்சியரிடம் ஆதங்கப்பட்டனர்.
மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ‘ உடல்கள் அழுகியது குறித்து விசாரிக்கப்படும். இறந்தோரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர்,’ என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து சினேகா, ராஜகுமாரி உடல்களை உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
இது குறித்து, சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல் கூறுகையில், "இறந்தவர்களின் உடல்கள் 12 மணி நேரத்திற்கு பிறகு தான் பிரேத பரிசோதனைக்கே வந்தன. அப்போதே அழுகிவிட்டன. மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகும் உடல்கள் வேகமாக அழுக ஆரம்பித்துவிடும். குளிர்சாதன இயந்திரங்கள் எதுவும் பழுதாகவில்லை" என்றார்.
கரோனாவால் விசாரணையில் தொய்வு:
இதற்கிடையில் ராணுவ வீரரின் மனைவி, தாயார் கொலை வழக்கை விசாரித்து வரும் காளையார்கோவில் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உட்பட 7 பேருக்கு கரோனா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் வழக்கு விசாரணையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT