Published : 16 Jul 2020 04:18 PM
Last Updated : 16 Jul 2020 04:18 PM

ஊரடங்கு: பாதிக்கப்பட்ட மக்கள் சென்னையை விட்டு சொந்த ஊர் திரும்ப அனுமதி கோரிய வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்கள், சென்னையை விட்டு சொந்த ஊர் திரும்ப அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மக்கள் வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் இழந்து தவிக்கின்றனர். இதனால் சென்னைக்கு பிழைப்பு தேடி வந்த மக்கள் பலரும், ஊரை காலி செய்து விட்டு சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர்.

சொந்த ஊர்களுக்குத் திரும்புகிறவர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த சேசுபாலன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "கரோனா தொற்று நவம்பர் மாதம் வரை உச்சத்தில் இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் உணவு மற்றும் உறைவிடத்திற்கான செலவை சமாளிக்க முடியாமல் மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முயற்சித்து வருகின்றனர். அவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம், மரணம் மற்றும் மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுவதால், சென்னையை விட்டு வெளியேற விரும்பும் மக்களை சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு உணவு, உறைவிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை இன்று (ஜூலை 16) விசாரித்த நீதிபதிகள், சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவி்ட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x