Published : 16 Jul 2020 02:50 PM
Last Updated : 16 Jul 2020 02:50 PM
கரோனா காலத்தில் வேலையிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், கிராமப்புறங்களில் ஒரே நம்பிக்கையாக விளங்குவது மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வரும் 100 நாள் வேலைத் திட்டம்தான். குறிப்பாக, மலைப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களுக்கு இதுதான் ஆறுதலாக உள்ளது. தற்போது இந்தத் திட்டத்தில்கூட வேலை கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள் மலைவாழ் பழங்குடி மக்கள்.
இதையடுத்து இன்று ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டாரத்தில் உள்ள பர்கூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு, 300-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன், அந்தியூர் ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணகுமார், பர்கூர் மலை வட்டாரக் குழுச் செயலாளர் பி.ஜெ.கணேசன், துணைச் செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்திற்குத் தலைமையேற்ற வி.பி.குணசேகரன், “பர்கூர் ஊராட்சியில் பர்கூர் மலைக் கிராமம் தவிர மடம், சுண்டபூர், தாமரைக்கரை, அணைபோடு, கத்திரிமலை, வேலாம்பட்டி என 33 பழங்குடி கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களைச் சேர்ந்த 2,000-க்கும் அதிகமானோர் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அட்டை பெற்றுள்ளனர். எல்லோருக்கும் 100 நாள் வேலை உறுதி என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். ஆனால், சில நூறு பேருக்குத்தான் தற்சமயம் வேலை வழங்கப்படுகிறது. அவர்களுக்கும் உரிய நாட்கள், உரிய சம்பளம், உரிய காலத்தில் வழங்கப்படவில்லை.
இதைப் பற்றி அலுவலர்களிடம் கேட்டால் பொறுப்பான பதில் இல்லை. எனவேதான் வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் வேலை கேட்டு இந்தப் போராட்டத்தை நடத்தி இருக்கிறோம். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் வேலை வழங்காவிட்டால் இந்தப் போராட்டம் அடுத்தடுத்த நிலைக்குச் செல்லும்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகையிடப்பட்ட தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் போராட்டக்காரர்களைச் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT