Published : 16 Jul 2020 02:59 PM
Last Updated : 16 Jul 2020 02:59 PM
திமுக வெற்றிபெற்ற உள்ளாட்சி அமைப்புகளை அதிமுக அரசு புறக்கணிப்பதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 16), திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
திமுக வெற்றி பெற்ற உள்ளாட்சி அமைப்புகளைப் புறக்கணிக்கும் அதிமுக அரசுக்குக் கண்டனம்!
உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளும் அதிகாரங்களும் அதிமுக அரசால் பறிக்கப்படுவதற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. தெருவிளக்குகள், குடிநீர் இணைப்புகள் போன்ற ஊராட்சி மன்றங்களின் அடிப்படை அதிகாரத்தைக் கூட அபகரிக்கும் விதத்தில், 'ஜல் ஜீவன் மிஷன்' கீழ் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கும் 2,264.74 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் டெண்டர் விடுவதும், சோலார் விளக்குகளை மாநில அளவில் கொள்முதல் செய்து ஒரு பல்ப் வாங்கும் அதிகாரத்தைக் கூட ஊராட்சி மன்றத் தலைவர்களிடமிருந்து பறிப்பதும், கரோனா நோய்க்கான கிருமிநாசினி மருந்துகள், ஸ்பிரேயர்கள் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியரே கொள்முதல் செய்துவிட்டு அதற்கான கட்டணங்களை மட்டும் ஊராட்சி மன்றங்களின் தலையில் கட்டுவது மிகவும் மோசமானது. கிராம சுயராஜ்யம் காண உருவாக்கப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது என்று இக்கூட்டம் வேதனையுடன் பதிவு செய்கிறது.
திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை முடக்கி வைத்து, ஊழலை மையப்படுத்தி, அதில் கட்டுப்பாடில்லாமல் எப்போதும் திளைத்துக் கொண்டும், நடமாடிக் கொண்டும் இருக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஜனநாயகத்தைப் போற்றி, மக்கள் பிரதிநிதிகளை மதித்து, திமுக சார்ந்த ஊராட்சி மன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளைப் புறக்கணிக்கும் எண்ணத்தை அதிமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளும் அதேவேளையில், அதிமுக அரசு திருந்தி நியாயமான வழிதேடத் தவறினால், நீதிமன்றத்தை நாடி தீர்வு காணப்படும் என்றும் இக்கூட்டம் எச்சரிக்கிறது.
இவ்வாறு திமுக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT