Published : 15 Jul 2020 09:00 PM
Last Updated : 15 Jul 2020 09:00 PM
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அகில இந்திய முக்கியத்துவம் வாய்ந்த புண்ணிய திருத்தலங்களில் ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில் தலையாய திருத்தலமாகும். இந்தியாவில் உள்ள நான்கு முக்கியத் திருத்தலங்களான ராமேசுவரம், துவாரகா, பூரி, பத்ரிநாத் ஆகியவற்றில் தெற்கே அமைந்த சிவ தலம் ராமேசுவரம் மட்டும் ஆகும். அதேபோல் பன்னரிண்டு ஜோதிர்லிங்க திருத்தலங்களில் வடக்கே பதினொன்றும் தெற்கே அமைந்துள்ள ராமேசுவரத்தில் தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகிய முப்பெருமையுடை காசிக்கு நிகரான புண்ணிய திருத்தலமாக விளங்குகிறது.
இத்தகைய புனிதமும், புகழும் மிக்க ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கியமானது ஆடித் திருக்கல்யாண நிகழ்ச்சி. இந்த ஆண்டுக்கான ஆடித்திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் ஜுலை 16 தொடங்கி 17 நாட்கள் ஜுலை 31 வரையிலும் நடைபெறுகிறது.
ஆடித் திருக்கல்யாண திருவிழாவில் முதல் நாளான புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. கால பூஜையை தொடர்ந்து பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் நவசக்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்குள்ள அம்பாள் தங்கக்கொடி மரத்தில் காலை 10.30 மணியளவில் கொடியேற்றப்பட்டு ஆடித்திருவிழா துவங்கியது.
நிகழ்ச்சி நிரல்
ஜுலை 20 திங்கட்கிழமை ஆடி அமாவாசை, ஜுலை 23-ம் தேதி தேரோட்டம், ஜுலை 25 சனிக்கிழமை ஆடிதபசு, ஜுலை 26 ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம், ஜுலை 31 வெள்ளிக்கிழமை கெந்தனமாதன பர்வதம் மண்டபகப்படிக்கு எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
கரோனா காரணமாக இந்த நிகழ்ச்சிகள் கோயிலுக்கு உள்ளே மூன்றாம் பிரகாரத்தில் கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெற உள்ளது. பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் ஜுலை 25 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள திருக்கல்யாண உற்சவம் பக்தர்கள் இணையதளத்தில் நேரலையாக பார்க்கும் வகையில் யூடிப் (youtube) இணையதளத்தில் நேரலை ஒளிபரப்பு செய்வதற்கு ஏற்பாடுகளை ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஆடி அமாவாசையன்று தர்ப்பணத்துக்கு பக்தர்கள் கூடுவதற்கு மாவட்ட நிர்வாகத்தினரால் தடை அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment