Published : 15 Jul 2020 08:46 PM
Last Updated : 15 Jul 2020 08:46 PM
கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்களில் கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் மாவட்ட ஆட்சியர், கோவை ஆட்சியர் கு.ராசாமணி என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தொடர்ந்து கள ஆய்வுகள் மேற்கொண்டு, பரவலைத் தடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். சில நாட்களுக்கு முன் செல்வபுரத்தில் தங்க நகைப் பட்டறையில் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் தொழிலாளர்கள் வேலை செய்து வந்ததைப் பார்த்த ஆட்சியர், நகைப் பட்டறை நிர்வாகியைக் கடுமையாகக் கண்டித்தார். இதேபோல, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு, உரிய கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி வந்தார்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் ஆட்சியருக்குக் கரோனா தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில், அவருக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று (ஜூலை 15) கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் ஆட்சியர் கு.ராசாமணி சேர்க்கப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியருடன் தொடர்பில் இருந்தவர்களுக்குப் பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். அதேபோல, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாநகராட்சி சார்பில் இன்று கரோனா நோய் தடுப்புப் பணி தொடர்பான பிரத்யேக செயலி மற்றும் கழிவுகளை அகற்றப் பயன்படுத்தும் ரோபோட்டுகள் அறிமுக விழா நடைபெறுவதாக இருந்தது. இதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்கவிருந்தனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT