Published : 15 Jul 2020 08:43 PM
Last Updated : 15 Jul 2020 08:43 PM

கடும் மூச்சுத்திணறல்; நடக்கவே முடியாத நிலைமை; சித்த மருத்துவம் மூலம் கரோனாவில் இருந்து மீண்ட காவல் உதவி ஆய்வாளரின் அனுபவம்

காவல் உதவி ஆய்வாளர் டீக்காராமன்.

சென்னை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 58 வயதான காவல் நிலைய உதவி ஆய்வாளர் டீக்காராமனும், அவரது 33 வயது மகனும் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மகனுக்கு அறிகுறிகளே இல்லாமல் உடல்நிலை சீராக இருந்த வேளையில், உதவி ஆய்வாளருக்கு மூச்சுத்திணறல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன.

கடுமையான மூச்சுத்திணறல், நாள்பட்ட நீரிழிவு நோய் இருந்தும், சித்த மருத்துவ சிகிச்சை மூலம் டீக்காராமன் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார். சென்னை, ஜவஹர் பொறியியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் கரோனாவுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்ட அனுபவம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டார்.

"கடந்த 2-ம் தேதி வாக்கில் 3 நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இருந்தது. மாத்திரைகள் உட்கொண்டும் குறையவில்லை. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டதில் 4-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா என்றவுடன் அச்சம் ஏற்பட்டது. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஒரேயொரு நாள் மட்டும் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். ஆனால், காய்ச்சல் குணமாகவில்லை. ஆக்சிஜன் அளவு 82-83 என்ற அளவில் இருந்ததால், கடுமையான மூச்சுத்திணறல் இருந்தது.

என்னுடைய மகனுக்கு அதற்கடுத்த நாளே (ஜூலை 5) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மகனின் நண்பர்கள் சித்த மருத்துவ சிகிச்சை குறித்துக் கூறினார்கள். அதனால், அன்றைய தினமே சென்னை, ஜவஹர் பொறியியல் கல்லூரியில் செயல்படும் சித்த மருத்துவ மையத்தில் சேர்ந்தோம்.

எழுந்து தனியாகக் கழிவறை கூட செல்ல முடியாத நிலை இருந்தது. மூச்சுத்திணறலை மாத்திரை மூலமாக குணப்படுத்தலாம் என்றனர். அங்கு ஒரு நாளைக்கு கபசுரக் குடிநீர், நிலவேம்புக் கசாயம் உள்ளிட்ட 7 வகையான கசாயங்கள் கொடுத்தனர். 'சரியாகிவிடும்' என நம்பிக்கை அளித்தனர். 3 நாளைக்கு 3 வேளை மாத்திரைகள் கொடுத்தனர். 4-ம் நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாக ஆரம்பித்தது. 6 நாட்களில் மூச்சுத்திணறல் சரியானது. இப்போது, ஆக்சிஜன் அளவு 97 என்ற அளவில் சீராக உள்ளது. முழுதாக குணமடைந்து நேற்று (ஜூலை 14) தான் வீடு திரும்பினோம். மூச்சுத்திணறல் இருந்ததாலேயே 11 நாட்கள் சிகிச்சை தேவைப்பட்டது. என் மகனுக்கு எந்தவித அறிகுறியும் இல்லை. இருப்பினும், எனக்குப் பக்கபலமாக மருத்துவமனையில் இருந்தார்", என்றார்.

தன் தந்தையும் தானும் கரோனாவிலிருந்து மீண்டது குறித்து பகிர்ந்துகொண்டார், உதவி ஆய்வாளரின் 33 வயதான மகன்.

"என்னால்தான் அப்பாவுக்குக் கரோனா தொற்று வந்திருக்க வேண்டும். பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரராக உள்ளேன். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டேன். அதன்மூலம் எனக்குத் தொற்று ஏற்பட்டு அப்பாவுக்குப் பரவியிருக்க வேண்டும். ஏனென்றால் அப்பா வெளியில் செல்லவில்லை. முதுகு வலி காரணமாக மெடிக்கல் விடுமுறையில்தான் இருந்தார்.

அப்பாவுக்கு 3 நாட்கள் வரை காய்ச்சல் இருந்தது. அதற்கு முன்னதாக எனக்கு 2 நாட்கள் காய்ச்சல் இருந்தது. எனக்கு மாத்திரை எடுத்தவுடன் 2 நாட்களில் சரியாகிவிட்டது.

எனக்கு அறிகுறியற்ற தொற்றுதான் என்பதால் பிரச்சினை இல்லை. இருப்பினும், அப்பாவுக்காக சிகிச்சை மையத்தில் நானும் சேர்ந்தேன்.

சித்த மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கும்போது, அப்பாவுக்கு ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தது. 3 நாட்கள் அப்பாவால் எழுந்திருக்கவே முடியவில்லை. அதற்கு முன்பு 10-12 கி.மீ. நடைபயிற்சி மேற்கொள்வார். அப்பாவுக்கு நீரிழிவு நோய் உள்ளது. அதுவும் கட்டுப்பாட்டில் இல்லை.

சிகிச்சையின்போது, நீரிழிவுக்கு ஏற்கெனவே எடுத்த மாத்திரைகளை எடுக்கப் பரிந்துரைத்தனர். செயற்கை ஆக்சிஜனுக்குப் பழகக்கூடாது என, அதனையும் கொடுக்கவில்லை. மூச்சுத்திணறலைக் கட்டுப்படுத்த மாத்திரைகள்தான் வழங்கினார்கள். காய்ச்சல், சளி ஆகியவற்றுக்கு மட்டும்தான் அலோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டன. உணவு அனைத்தும் வீட்டுச் சாப்பாடு போன்று இருந்தது. மூலிகை கசாயங்கள், நல்ல உணவு, மாத்திரைகளை வழங்கினர்.

சிகிச்சைக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக நடக்க ஆரம்பித்தார். அப்போதும் கழிவறை செல்லும் வரை தான் நடக்க முடியும். அதன்பிறகு மூச்சுத் திணற ஆரம்பித்துவிடும். மெல்ல மெல்ல சிகிச்சை மையத்தின் வளாகத்தை மூன்று முறை சுற்றி நடக்கும் அளவுக்குத் தேறினார்.

சிகிச்சை மையத்தின் நல்ல கவனிப்பால் கரோனா குறித்த பயமே இல்லை. நடைப்பயிற்சி, யோகா, கிரிக்கெட் விளையாடுவது என கரோனா நோயாளிகள் நல்ல சூழலில் அங்கிருந்தனர். எந்தவிதமான பயமும் இல்லாமல் சித்த மருத்துவர் வீரபாபு எங்களுக்கு சிகிச்சை அளித்தார். 1-2 வயதுக் குழந்தைகளுக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

'வரக்கூடாத நோய் வந்துவிட்டது' என மற்றவர்கள் எங்களைப் புறக்கணித்தனர். இப்போது உரிய சிகிச்சையை உரிய நேரத்தில் எடுத்துக்கொண்டால் கரோனா தொற்றிலிருந்து மீண்டு வரலாம் என நானும் அப்பாவும் நிரூபித்துள்ளோம்" என்றார்.

- ராஜஸ்ரீ

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x