Published : 15 Jul 2020 07:01 PM
Last Updated : 15 Jul 2020 07:01 PM
சுருக்குமடி வலையினைப் பயன்படுத்தும் மீனவர்கள் நீதிமன்றத் தீர்ப்புகளை அவமதிக்கும் வகையில் நடக்காமல், அரசுக்கு ஒத்துழைப்பு நல்கவும், இந்த வலைகளைப் பயன்படுத்துவதற்கு மாற்றாக ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு அரசு வழங்கும் உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“இன்று (15.07.2020) சென்னை தலைமைச் செயலகத்தில் சுருக்குமடி வலை பயன்பாட்டினைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் க.சண்முகம், காவல்துறை இயக்குநர் திரிபாதி, காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் ஒழுங்கு) ஜெயந்த் முரளி, மீன்வளத்துறை இயக்குநர் சமீரன், கடல் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் ஆகிய அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கடலூர், நாகப்பட்டினம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சுருக்குமடி வலையினைப் பயன்படுத்த நாடுமுழுவதும் தடை உள்ளது என்றும், நீதிமன்றத் தீர்ப்புகள் இத்தகைய வலைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது என்றும் விரிவாக எடுத்துக்கூறினார்.
மேலும், இவ்வலைகளைப் பயன்படுத்துவதால் மீன்வளம் மற்றும் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும், இந்த வலைகளைப் பயன்படுத்துவது குறித்து புகார்கள் வருவதோடு அவ்வப்போது மீனவர்களிடையே மோதல்கள் ஏற்பட்டு வருவதையும் இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது என்றும் எடுத்துரைத்தார்.
ஆகவே, மீனவர்கள் நீதிமன்றத் தீர்ப்புகளை அவமதிக்கும் வகையில் நடக்காமல், அரசுக்கு ஒத்துழைப்பு நல்கவும் இந்த வலைகளைப் பயன்படுத்துவதற்கு மாற்றாக ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு அரசு வழங்கும் உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் கேட்டுக்கொண்டார், .
கூட்டத்தில் கலந்து கொண்ட மீனவ பிரதிநிதிகள், இவ்வலைகளின் பயன்பாட்டினை உடனடியாகத் தடை செய்தால், பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என்பதால் இந்த வலைகளை அனுமதிக்க வேண்டும் எனவும் இத்தொழிலில் இருந்து மாற்று மீன்பிடித் தொழிலுக்கு மாறுவதற்கு மூன்று முதல் ஐந்தாண்டு கால அவகாசம் தேவை என்றும், படிப்படியாக மாற்றுத் தொழிலுக்கு மாறுவதாகவும் தெரிவித்தனர்.
அதுவரை சிறுதொழிலுக்கு பாதகம் ஏற்படாமல் ஆண்டிற்கு ஆறு மாதங்கள் மட்டும் இவ்வலைகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
மீன்துறை மூலம் கீழ்க்கண்ட மாற்று மீன்பிடித் திட்டங்கள் செயல்படுத்தப் படுவதாகவும், சுருக்குமடி பயன்படுத்தும் மீனவர்கள் இவற்றில் பொருத்தமான மாற்றுத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்து பயன்பெற மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.
1. பிரதான் மந்திரி மட்சய சம்பத யோஜனா (PMMSY) திட்டத்தின் கீழ் ரூ.120 லட்சம் மதிப்புள்ள ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் ரூ.48 லட்சம், 40 விழுக்காடு மானியத்துடன் கட்டி வழங்கும் திட்டம்.
2. மாநில அரசுத் திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் ரூ.30 லட்சம், 50 விழுக்காடு மானியத்தில் கட்டி வழங்கும் திட்டம்.
3. கண்ணாடி நாரிழைப்படகு, இயந்திரம், வலை மற்றும் ஐஸ்பெட்டிகள் ரூ.4.25 லட்சம் மதிப்பீட்டில் ரூ.1.70 லட்சம், 40 விழுக்காடு மானியத்துடன் வழங்கும் திட்டம்.
இவை தவிர, முதல்வர் அறிவுரையின்படி, சுருக்குமடி தொழிலில் ஈடுபட்டுள்ள நாட்டுப்படகுகளுக்கு அதிகபட்சமாக இரண்டு லட்சம் மதிப்புள்ள வலையில் 40 விழுக்காடு மானியத்துடன் வழங்குவதற்கு புதிய திட்டம் செயல்படுத்த பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
எனவே, மீனவர்கள் அரசின் விளக்கங்களைப் பரிசீலித்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படா வண்ணம் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT