Published : 15 Jul 2020 02:41 PM
Last Updated : 15 Jul 2020 02:41 PM
சாத்தான்குளம் விவகாரத்தில் தந்தை, மகனுக்கு மருத்துவச் சான்று வழங்கிய அரசு மருத்துவரிடம் சிபிஐ குழு விசாரணை மேற்கொண்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை, காவலர்கள் என, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோரிடம் விசாரிக்க நேற்று சிபிஐ அவர்களை 2 நாள் காவலில் எடுத்தது.
மதுரை ஆத்திகுளத்திலுள்ள சிஐபி அலுவலகத்தில் வைத்து, கூடுதல் டிஎஸ்பி சுக்லா தலைமையிலான குழு நள்ளிரவு வரை சமூக இடைவெளியைப் பின்பற்றி விசாரித்தனர்.
இந்நிலையில் இன்று காலையில் மீண்டும் விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொருவரிடமும் குறிப்பிட்ட கேள்விகள் அடங்கிய பட்டியலை வழங்கி விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் காவலர் முத்துராஜை மட்டும் ஒரு குழுவினர் சாத்தான்குளத்துக்கு நேரில அழைத்துச் சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் சம்பவத்தன்று நடந்த விவரம் குறித்து விசாரிக்கின்றனர்.
இதற்கிடையில் சிறையில் அடைக்கும் முன்பு, கடந்த 19-ம் தேதி நள்ளிரவு மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தியபின், ஜெயராஜ், பென்னிஸுக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்கிய கோவில்பட்டி அரசு மருத்துவரிடமும் சிபிஐ சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது.
இதற்காக, ஜெயராஜ், பென்னிக்ஸுக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர் மதுரை சிபிஐ அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவரிடம் மருத்துவச் சான்றிதழ் வழங்கியபோது, இருவரின் உடல் நிலை குறித்து விசாரிக்கின்றனர்.
மேலும், மருத்துவர்கள் விண்ணிலா, பாலசுப்ரமணியன் ஆகியோரிடமும் சிபிஐ விசாரிக்கவுள்ளது. இதற்காக அவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்த சிபிஐ அலுவலகத்தில் விசாரித்தபோது, ‘‘முக்கியமான இவ்வழக்கில் ஒவ்வொன்றாக விசாரிக்கிறோம். தற்போது ஒருவரை மட்டும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளோம்.
தேவைப்படும் பட்சத்தில் மற்றவர்களையும் நேரில் அழைத்துச் சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். வழக்கில் தொடர்புடையவர்கள், சம்பந்தப்பட்டோரிடம் விசாரிக்கப்படும். எதுவானாலும் விசாரணை விவரங்களை வெளியில் கூற இயலாது,’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT