Published : 15 Jul 2020 02:31 PM
Last Updated : 15 Jul 2020 02:31 PM

திமுக ஊராட்சி மன்றத் தலைவர் படுகொலை; மக்கள் பிரதிநிதிகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை: ஸ்டாலின் கண்டனம்

சென்னை

மக்கள் பணியில் ஈடுபட்டிருந்த திமுக ஊராட்சி மன்றத் தலைவர் பரமகுரு ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது. தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கே பாதுகாப்பில்லாத அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதற்கு இச்சம்பவமே சான்று என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

“மக்கள் நலப்பணியில் ஈடுபட்டிருந்த திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் பரமகுரு படுகொலை செய்யப்பட்டிருப்பது நம் நெஞ்சத்தைப் பதற வைக்கிறது. தமிழகத்தை ஆளும் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் நிர்வாக அலட்சியமும், சட்டம் ஒழுங்கு சீர்கேடும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஒன்றியம் கொசவன்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரான திமுகவைச் சேர்ந்த பரமகுரு, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளரும் ஆவார். தனது ஊராட்சியில் போடப்படும் சாலைப் பணிகளைப் பார்வையிடச் சென்ற அவரை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்திருக்கிறது.

ஈவிரக்கமற்ற இந்த வன்முறைச் செயலுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்து, மக்கள் பணியில் உயிர் பறிக்கப்பட்ட பரமகுருவினை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் திமுகவினருக்கும் என் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் பிரதிநிதிகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் தமிழகத்தில் அதிகரித்து வருவதை ஊராட்சி மன்றத் தலைவர் பரமகுரு படுகொலை வெளிப்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தின் ஆணிவேர்களாகத் திகழ்பவை உள்ளாட்சி அமைப்புகளே. அவற்றின் அதிகாரங்களை மட்டுப்படுத்த நினைப்பதும், குறிப்பாக திமுகவினர் வெற்றி பெற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதி வழங்காமல் தவிர்ப்பதும் அதிமுக அரசின் வழக்கமாக உள்ளது.

இந்நிலையில்தான், தனது ஊராட்சியில் முறையாகப் பணிகள் நடைபெறுகிறதா எனப் பார்வையிடச் சென்ற திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் பரமகுரு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலை செய்த கும்பலைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், முழுமையான விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஊராட்சிகளில் பொறுப்பில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும்.

பரமகுருவின் படுகொலைக்கு நீதி கிடைக்கத் துணை நிற்பதுடன், அவரது குடும்பத்தினருக்கும் திமுக என்றென்றும் ஆதரவாக இருக்கும்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x