Published : 15 Jul 2020 02:17 PM
Last Updated : 15 Jul 2020 02:17 PM
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் ரத்து என்பது தவறான செய்தி என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
தஞ்சாவூர் அருகே மடிகையில் உள்ள அரசு நேரடி நெல்கொள் முதல் நிலையத்தில் இன்று (ஜூலை 15) ஆய்வு செய்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"முதல்வர் பழனிசாமி தொடர்ந்து விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றி வருகிறார். அந்த அடிப்படையில் விவசாயிகளுக்குத் தேவையான நேரங்களில், தேவையானதை வழங்கி வருகிறார். குறிப்பாக முதல்வர் மேட்டூர் அணையை 8 ஆண்டுகளுக்குப் பிறகு குறுவை சாகுபடிக்காகத் திறந்துள்ளார். 306 நாட்கள் 100 அடி தண்ணீர் இருந்தது வரலாற்று ஆண்டாகப் பார்க்கப்படுகிறது.
விவசாயிகளுக்குத் தேவையான மும்முனை மின்சாரத்தைக் கோடை சாகுபடிக்கு வழங்கியதால், எவ்விதப் பிரச்சினைகளும் இன்றி விவசாயம் நடைபெற்றது. கோடை பருவத்தில் மட்டும் 26 லட்சத்து 69 ஆயிரத்து 167 மெட்ரிக் டன் அளவுக்கு இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது நெல் கொள்முதல் வரலாற்றில் மைல் கல். 28 லட்சம் மெட்ரிக் டன் வரை கொள்முதலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 4 லட்சத்து 29 ஆயிரத்து 598 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். 5.48 கோடி ரூபாய் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஊக்கத்தொகையான 168.93 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.
டெல்டா முழுவதும் 412 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் 83 நெல் கொள்முதல் நிலையங்களும் என 495 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் எவ்விதப் பிரச்சினையும் இன்றி கொள்முதல் நடைபெற்று வருகிறது".
இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் ரத்தா என்ற செய்தியாளர் கேள்விக்குப் பதிலளித்த அவர், "கூட்டுறவு வங்கியில் நகைக்கடனை விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டாம் என யாரும் அறிவிக்கவில்லை. அப்படி அறிவிப்புகளும் வரவில்லை. இது தவறான செய்தி. சில இடங்களில் நகைக்கடனுக்கான நிதி ஒதுக்கீடு முடிந்திருக்கும். எனவே, அப்படிக் கூறியிருப்பார்கள், விவசாயிகளுக்கு நகைக்கடன் வேண்டுமென்றால் முதல்வரிடம் அனுமதி பெற்று வழங்கப்படும்" என்றார்.
மேட்டூர் அணையில் நீர் இருப்பு தொடர்ந்து குறைகிறது, தமிழக அரசின் நடவடிக்கை எப்படி உள்ளது என்ற செய்தியாளர் கேள்விக்கு அமைச்சர் காமராஜ் பதிலளிக்கையில், "கர்நாடக அரசு நமக்குத் தர வேண்டிய தண்ணீரை நிச்சயம் கொடுத்துதான் தீர வேண்டும். அதற்காக தமிழக அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நல்ல மழை இருப்பதால், தண்ணீர் பிரச்சினை வர வாய்ப்பில்லை. விவசாயிகள் கவலையில்லாமல் சாகுபடி செய்யலாம். விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீர் கடைமடை வரை சென்றுவிட்டது" என்றார்.
சசிகலா விரைவில் சிறையிலிருந்து வரும்போது அரசியல் மாற்றம் ஏற்படும் எனக் கூறுகிறார்களே என்ற செய்தியாளர் கேள்விக்கு அமைச்சர் காமராஜ் பதில் அளிக்கையில், "நான் தெளிவாகச் சொல்கிறேன். பொதுக்குழு, செயற்குழு எடுத்த முடிவின் அடிப்படையில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இணைந்து கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்திச் செல்கிறார்கள். அதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. யாராலும் இந்த ஆட்சியை எதுவும் செய்ய முடியாது. தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் இரண்டாவது கருத்துகள் என்பது கிடையாது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT