Published : 15 Jul 2020 02:01 PM
Last Updated : 15 Jul 2020 02:01 PM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவாத மருத்துவப் படிப்புகளுக்கான 7.5% உள் ஒதுக்கீடு; தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

சென்னை

நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதில் ஏற்பட்ட தோல்வியை மறைப்பதற்கு அரசு கொண்டுவந்திருக்கும் 7.5% உள் ஒதுக்கீடு, நீட் தேர்வினால் மருத்துவம் படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மாணவர்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையாது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“தேசிய அளவில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்காக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதை இரண்டு ஆண்டுகள் வரை மறைத்து, தமிழக ஆட்சியாளர்கள் ஆடிய நாடகம் நீதிமன்றம் மூலம் அம்பலமானது.

மத்திய அரசிடமிருந்து நீட் மசோதாக்கள் திரும்பி வந்தவுடனேயே அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை பழனிசாமி அரசு மேற்கொள்ளாததால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில், நீட் தேர்வுக்கு ஆண்டு முழுவதும் பயிற்சி என்ற பெயரில் லட்சக்கணக்கில் கட்டணம் பெறும் ஏராளமான தனியார் மையங்கள் உருவாகியிருக்கின்றன. இதனால் நீட் தேர்வுக்கான பயிற்சி பெறுவதும் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டது.

அரசு சார்பில் நடத்துவதாக சொன்ன நீட் தேர்வு பயிற்சியும் வழக்கம்போல சரியான திட்டமிடுதலோ, முறையான செயல்படுத்துதலோ இல்லாமல் தோல்வியடைந்திருக்கிறது. இதன் விளைவாக தமிழக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் நீட் தேர்வை எழுதுவதே இல்லை. அப்படியே எழுதினாலும் தேவையான மதிப்பெண்களை பெற முடியவில்லை.

இந்தச் சூழலில் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க பழனிசாமி அரசு முடிவெடுத்திருக்கிறது. அதிலும்கூட, இதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் குழு அளித்த 10% பரிந்துரையை 7.5% ஆகக் குறைத்திருக்கிறார்கள். ஆனால், நீட் தேர்வுக்குப் பயிற்சி பெறவே வழியில்லாத கிராமப்புற மாணவர்களுக்கு இந்த உள் ஒதுக்கீடு எப்படிப் பயன்தரும் என்று தெரியவில்லை.

எனவே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு முழுமையான விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதாக்களைக் கொண்டு வந்து, அதை மத்திய அரசை ஏற்றுக்கொள்ள செய்வது மட்டுமே இவ்விவகாரத்தில் நிரந்தரத் தீர்வாக இருக்கும். உச்ச நீதிமன்றத்தைக் காரணம் காட்டி தப்பிக்க நினைக்காமல், மாநில அரசுகளுக்கு இது தொடர்பாக அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் வாய்ப்புகளை பழனிசாமி அரசு சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

அதைச் செய்வதற்குப் பதிலாக, உள் ஒதுக்கீடு என்பதெல்லாம் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து, நிஜமான பிரச்சினையைத் திசை திருப்பும் வேலையாகவே பார்க்கவேண்டி இருக்கிறது”.

இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x