Last Updated : 15 Jul, 2020 12:56 PM

 

Published : 15 Jul 2020 12:56 PM
Last Updated : 15 Jul 2020 12:56 PM

சாத்தான்குளம் வழக்கு: மனித உரிமை ஆணைய துணை கண்காணிப்பாளர் 2-வது நாளாக விசாரணை- ஜெயராஜ், பென்னிக்ஸை சோதனை செய்த அரசு மருத்துவர்கள் ஆஜர்

சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய விசாரணை அதிகாரி இன்று அரசு மருத்துவர்கள், சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கடிதம் எழுதினர்.

இந்நிலையில் சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. மாநில மனித உரிமை ஆணையம் சார்பில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற காவல் துறை துணை கண்காணிப்பாளர் குமார் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.

அவர் நேற்று மாலை சாத்தான்குளம் சென்று ஜெயராஜ்- பென்னிக்ஸ் குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், அவர்களது கடைக்கு அருகேயுள்ள கடைக்காரர்கள், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் தலைமை காவலரும், வழக்கில் முக்கிய சாட்சியுமான ரேவதி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி சாட்சியங்களை பதிவு செய்தனர்.

தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று மாநில மனித உரிமை ஆணைய விசாரணை அதிகாரி குமார் தனது விசாரணையை தூத்துக்குடி சுற்றுலா மாளிகையில் வைத்து மேற்கொண்டார். சாத்தான்குளம் அரசு மருத்துவர் வினிலா, சாத்தான்குளம் காவல் நிலைய தற்போதைய ஆய்வாளர் பெர்னாட் சேவியர், கோவில்பட்டி அரசு மருத்துவர் பாலசுப்ரமணியன், சாத்தான்குளம் தனிப்பிரிவு காவலர் சந்தனகுமார் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர்.

ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார். இந்த விசாரணை மாலை வரை தொடர்ந்து நீடித்தது. இது குறித்து மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை அதிகாரி குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சாத்தான்குளம் வியாபாரிகள் இறந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவு அறிக்கைகள் மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் மற்றும் அதிகாரி சுனில் குமார் ஆகியோரிடம் ஒப்படைக்கப்படும். இந்த சம்பவத்தில் மனித உரிமை மீறல் இருப்பது தெரியவந்தால் நிச்சயமாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாளை மதுரை சிறைச்சாலைக்குச் சென்று சாத்தான்குளம் வழக்கில் கைதாகியுள்ள காவலர்களிடம் விசாரணை நடத்த உள்ளேன் என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x