Published : 15 Jul 2020 12:42 PM
Last Updated : 15 Jul 2020 12:42 PM
நோயின் தீவிரத்தன்மையைக் குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஜூலை 15) வெளியிட்ட அறிக்கை:
"தமிழக அரசு, தமிழ்நாடு முதல்வரின் தலைமையில், கரோனா நோய்த்தொற்றைத் தடுக்கவும் சிகிச்சைகள் அளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. முதியவர்கள், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்த நோய், இருதயம் சார்ந்த நோய்கள் போன்ற பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை கோவிட்-19 நோய்த்தொற்று தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் கடந்த 50 ஆண்டுகளாக பிசிஜி தடுப்பு மருந்து குழந்தைகளுக்குப் பாதுகாப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இது உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகத் தெரியவந்துள்ளது. பிசிஜி தடுப்பு மருந்தை 60 முதல் 95 வயது வரையிலான முதியவர்களுக்குச் செலுத்துவதன் மூலம் நோய்வுற்ற விகிதமும் உயிரிழப்பு விகிதமும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேற்கூறிய காரணங்களின் அடிப்படையிலும், இன்றளவில் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு உரிய மருந்துகள் இல்லாத நிலையிலும் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்தினைச் செலுத்தி அதன் செயல்திறனை ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தமிழ்நாடு அரசின் அனுமதியினைக் கோரியிருந்தது. இதனை ஏற்று உடனடியாக உரிய அனுமதியை வழங்கி தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தச் சோதனை முயற்சியை ஐ.சி.எம்.ஆர். நிறுவனத்தின் கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வெகு விரைவில் தொடங்கவுள்ளது.
பிசிஜி தடுப்பு மருந்தினை முதியவர்களுக்குச் செலுத்துவதன் மூலம் கோவிட்-19 நோயின் தீவிரத் தன்மையைக் குறைக்கவும் மருத்துவமனையில் அனுமதியைத் தவிர்க்கவும் உயிரிழப்பைக் குறைக்கவும் பேருதவியாக அமையும். தமிழ்நாடு முதல்வரின் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் தொடர் பணிகள் தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும்"
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT