Last Updated : 15 Jul, 2020 11:42 AM

1  

Published : 15 Jul 2020 11:42 AM
Last Updated : 15 Jul 2020 11:42 AM

இன்று பெருந்தலைவர் பிறந்த நாள்: பனை ஓலையில் பள்ளிக் குழந்தைகளுடன் காமராஜர் சிலை- கலை படைப்பால் நன்றி கூறும் தூத்துக்குடி தொழிலாளி

தூத்துக்குடி

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் இன்று (ஜூலை 15) கொண்டாடப்படும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தைச் சேர்ந்த பனை தொழிலாளி ஒருவர் காமராஜர், இரண்டு பள்ளிக் குழந்தைகளுடன் இருப்பது போன்று பனை ஓலையில் சிலைகளை உருவாக்கியுள்ளார்.

கரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் மாணவ, மாணவியர் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் காமராஜருடன் பள்ளிக் குழந்தைகள் இருக்கும் காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் காமராஜர் தெருவில் வசித்து வருபவர் பால்பாண்டி (65). பனை தொழிலாளியான இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக பனை ஓலையில் பல்வேறு கலைநயமிக்க பொருட்களை உருவாக்கி வருகிறார். பனை ஓலையை கொண்டு இவர் உருவாக்கும் பல்வேறு உருவச்சிலைகள் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

குறிப்பாக பெருந்தலைவர் காமராஜரின் 7 அடி சிலை, அப்துல்கலாம், விவசாயி, பனையேறும் தொழிலாளி, தாஜ்மகால், கிறிஸ்தவ ஆலயம், கோபுரம் உள்ளிட்ட பல்வேறு உருவங்களைப் பனை ஓலை மூலம் இவர் படைத்துள்ளார். தனது படைப்புகளை கல்லூரிகள் மற்றும் பல்வேறு மாநாடுகளில் கண்காட்சியாகவும் நடத்தி வருகிறார்.

இந்த ஆண்டு ஜூலை 15 காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று பால்பாண்டி ஆசைப்பட்டார். அதன்படி காமராஜருடன் இரண்டு பள்ளிக் குழந்தைகள் இருப்பது போல ஓலையால் செய்யத் தொடங்கினார்.

கடந்த 2 மாத தீவிர முயற்சிக்குப் பின் சிறுவர், சிறுமி ஆகிய இரண்டு பள்ளி குழந்தைகள் புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு பள்ளி செல்லும் காட்சியை தத்துரூபமாக பனை ஓலையில் உருவாக்கி முடித்தார்.

அதன்பின் ஏற்கெனவே செய்து வைத்திருந்த காமராஜர் சிலைக்கு இருபுறமும் பள்ளிச் சிறுவர்களை வைத்து தனது வீட்டுக்கு முன்பு காட்சிக்கு வைத்துள்ளார்.

இன்று (ஜூலை 15) காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இந்த உருவங்களை அவர் செய்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் வியப்புடன் பார்த்து செல்கிறார்கள்.

கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் குழந்தைகள் வீடுகளிலேயே மூன்று மாதங்களாக முடங்கி கிடக்கின்றனர். எப்போது பள்ளிக்கு செல்வோம். ஆசிரியர்கள், நண்பர்களை எப்போது சந்திப்போம் என்ற ஏக்கத்தில் குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் காமராஜரோடு இரு குழந்தைகள் இருக்கும் இந்த காட்சி குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதுகுறித்து பால்பாண்டி கூறும்போது, நான் ஆண்டுதோறும் பல்வேறு உருவங்களை பனை ஓலையில் செய்து வருகிறேன். ஏற்கனவே காமராஜரின் 7 அடி உயரச் சிலையைப் பனை ஓலையில் செய்து வைத்திருந்தேன்.

அதை தினமும் நான் பார்க்கும் போது காமராஜர் தனியாக நிற்பது போலவே எனக்குத் தோன்றியது. கல்விக் கண் திறந்த காமராஜரை பள்ளி மாணவர்களோடு வைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது.

எனவே, கடந்த 2 மாதமாக இரவு பகலாக பனை ஓலையில் பள்ளி குழந்தைகளின் உருவங்களை செய்தேன். கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த ஆண்டு காமராஜர் பிறந்த நாள் விழாவை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட இயலவில்லை.

ஆனாலும், பள்ளிக் குழந்தைகளோடு காமராஜரை சேர்த்து பார்க்கும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x