Published : 15 Jul 2020 11:05 AM
Last Updated : 15 Jul 2020 11:05 AM
கூட்டுறவு வங்கிகளில் வேளாண் கடன், நகைக் கடன் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, வைகோ இன்று (ஜூலை 15) வெளியிட்ட அறிக்கை:
"கூட்டுறவு வங்கிகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு ஜூன் 24, 2020 அன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் அதற்கான அவசரச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் -1947 இன்கீழ் கூட்டுறவு வங்கிகள் அனைத்துமே ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில்தான் இருக்கின்றன. இந்த வங்கிகளுக்கு உரிமம் வழங்குவது, ரத்து செய்வது, வங்கி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட அதிகாரங்கள் ரிசர்வ் வங்கி வசம்தான் இருந்து வருகின்றன. ஆனால், கூட்டுறவு வங்கிகளின் நிர்வாக அதிகாரம் மட்டும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
இந்நிலையில்தான் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறித்து வரும் மத்திய பாஜக அரசு, கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல அவசரச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது.
இந்தியா முழுவதும் 1,482 நகரக் கூட்டுறவு வங்கிகளையும் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் கிளைகளைக் கொண்டிருக்கும் 58 மல்டி கோ-ஆப்பரேட்டிவ் வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்போவதாக அறிவிக்கப்பட்டது.
நகரக் கூட்டுறவு வங்கிகளில் இந்தியா முழுவதும் சுமார் 8.6 கோடி மக்களின் 4.48 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு இருக்கின்றது. முதலீட்டாளர்களின் தொகைக்கு உத்தரவாதம் இருக்கிறது என்று மத்திய அரசு கூறினாலும், ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் இருக்கும்போதே பொதுத்துறை வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி பல நிறுவனங்கள் ஏப்பமிட்டதை நினைக்கும்போது கூட்டுறவு வங்கிகளின் கதி என்னவாகும் என்ற கேள்வியும் எழுகிறது.
நகரக் கூட்டுறவு வங்கிகள் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள 96 ஆயிரம் தொடக்கக் கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுபோகப்படுகின்றன.
வேளாண்மைத் தொழிலுக்கு ஆதாரமாகவும், வேளாண் பணிகள் தொய்வின்றி நடைபெற்று, வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் ஆற்றும் சேவைகள் மிகவும் இன்றியமையாதது ஆகும்.
இந்த வங்கிகள்தான் சிறு தவணை மற்றும் நடுத்தர தவணைக் கடன்களை விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழிலுக்கு வழங்குகின்றன. வேளாண் பயிர்க் கடன்கள் வழங்குவதுதான் இவற்றின் முக்கியப் பணியாகும். இதில் பதிவு செய்யப்பட்ட கரும்பு சாகுபடியாளர்களுக்கு 10 ஏக்கர் வரை கூட்டுப் பாதுகாப்பு இல்லாமலும் மற்றும் இதர பயிர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் கடன் அளிக்கப்படுகிறது.
கடன் அளவு இதற்கு மேல் சென்றால் சொத்துக்கள் அல்லது நகைகள் அடமானம் வைத்து அதன் மீது கடன் வழங்கப்படுகின்றது. மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், இதர வேளாண் தேவைகளான பண்ணை இயந்திரங்கள் வாங்குதல், விவசாயம் அல்லாத தேவைகளான நுகர்வோர் பயன்பாடு, வீட்டுக் கடன்கள், கல்விக் கடன்கள் மற்றும் தொழில் கடன்கள் வழங்கி வருகின்றன.
கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் முறையாகத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி விகிதத்தையும் குறைத்து கூட்டுறவு வங்கிகள் சேவை செய்கின்றன.
தற்போது ஒட்டுமொத்தமாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் சென்றுவிட்டதால், முதல்படியாக நகைக் கடன்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வேளாண் தொழிலுக்கு கடன் பெற முடியாமல் கந்து வட்டிக் கும்பலிடம் விவசாயிகள் சிக்கிவிடும் துயரச் சூழல்தான் உருவாகும்.
தமிழகத்தில் உள்ள தலைமை கூட்டுறவு வங்கி, 23 மத்திய கூட்டுறவு வங்கிகள், 128 நகர கூட்டுறவு வங்கிகள், 4,250 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் நகைக் கடன்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம் செய்தி அனுப்பி இருப்பதன் மூலம் ரிசர்வ் வங்கியின் உத்தரவு நடைமுறைக்கு வந்துவிட்டதை அறிய முடிகிறது.
மக்களிடம் நேரடியாக தொடர்பில் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுசென்றது மட்டுமல்ல, நகைக் கடன் வழங்குவதை நிறுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எந்த வகையிலும் ஏற்கவே முடியாது. கூட்டுறவு வங்கிகள் சுயேட்சையாக இயங்கவும், மக்களுக்கு எளிதில் வேளாண் கடன், பயிர்க் கடன், நகைக் கடன் உள்ளிட்ட கடன்கள் கிடைப்பதையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்"
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT