Published : 15 Jul 2020 09:23 AM
Last Updated : 15 Jul 2020 09:23 AM
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலிருந்து பெரியார் சிந்தனைகள் நீக்கப்பட்டுள்ளதற்கு மதிமுக.பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, வைகோ இன்று (ஜூலை 15) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா பொது முடக்கத்தைக் கருத்தில்கொண்டு, சி.பி.எஸ்.இ. மாணவர்களின் பாடச் சுமை 30 விழுக்காடு குறைக்கப்படும் என்று ஜூலை 7 ஆம் தேதி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது. அதில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை குறைக்கப்படும் பாடங்கள் குறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அவற்றில், 10 ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் ஜனநாயகம், பன்முகத்தன்மை போன்ற பாடப் பிரிவுகளும், 11 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை ஆகிய பாடப் பிரிவுகளும் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளன. இதனைக் கண்டித்து ஜூலை 8 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.
தற்போது சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் மொத்தம் உள்ள 9 அத்தியாயங்களில் 7 முதல் 9 வரை மூன்று அத்தியாயங்கள் நீக்கப்பட்டு உள்ளன. அதில் பெரியார் சிந்தனைகள், மா.பொ.சி.யின் எல்லைப் போராட்ட வரலாறு, ராஜராஜசோழனின் மெய்கீர்த்தி போன்ற பாடங்களும், தமிழகப் பெண்களின் சிறப்புகளை விளக்கும் 'மங்கையராய்ப் பிறப்பதற்கே' எனும் பாடமும் நீக்கப்பட்டு உள்ளன.
மேலும் திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்த பாடங்களும், இந்திய தேசிய இராணுவத்தில் தமிழரின் பங்கு எனும் பகுதியும் அடியோடு நீக்கப்பட்டு உள்ளன.
சி.பி.எஸ்.இ. மாணவர்களின் பாடச் சுமையைக் குறைக்கிறோம் என்று தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம் வரலாறு உள்ளிட்ட பாடங்களையும் உலகப் பொதுமறையாம் திருக்குறள், குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரம் உள்ளிட்ட பாடப் பிரிவுகள் பாஜக அரசால் திட்டமிட்டே நீக்கப்பட்டு உள்ளது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இந்தியாவின் பன்முகத்தன்மையை சுக்குநூறாக்கி, ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிப்பதற்கும், பாடப் பிரிவுகளில் இந்துத்துவ சனாதன கருத்துகளைப் புகுத்துவதற்கும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு பாடத் திட்டத்தை 30 விழுக்காடு குறைக்கிறோம் என்று சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனத்தின் வரலாறு, பண்பாட்டு அடையாளங்களை பாடத்திட்டங்களில் இடம்பெறச் செய்வதுதான் ஒருமைப்பாட்டை உருவாக்கும் என்பதை மத்திய பாஜக அரசு உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT