Published : 15 Jul 2020 06:45 AM
Last Updated : 15 Jul 2020 06:45 AM

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு; கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கும் வாய்ப்பு- முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

சென்னை

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, 5 கட்டங்களாக நீட்டிக்கப்பட்டது. தற்போது 6-ம் கட்டமாக பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு முறை ஊரடங்கை நீட்டிக்கும் முன்பு முதல்வர் பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவினர், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி, தேவைப்படும் இடங்களில் தளர்வுகளையும் நோய் அதிகரிக்கும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் அறிவித்து வருகிறார்.

இதற்கிடையே, தற்போதைய கரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில்கொண்டு இந்த ஆண்டு நீட் தேர்வு வேண்டாம் என்றும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.

மேலும், தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்புகளில் சேர்வது குறைவாக இருப்பதை கருத்தில்கொண்டு, 6 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு அளிப்பதற்கான அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்று முதல்வர் பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

7 பேர் கொண்ட குழு அமைப்பு

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமீபத்தில் முதல்வர் பழனிசாமியிடம் வழங்கினர். அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்க பரிந்துரை அளித்திருந்ததாக கூறப்பட்டது. இந்த அறிக்கை தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்க அரசு முடிவு செய்திருந்தது.

இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்ட அரங்கில் நடந்தது. கரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சையில் உள்ள அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோரும் உடல்நலக் குறைவால் சி.வி.சண்முகமும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இவர்களைத் தவிர துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மற்ற அமைச்சர்கள், தலைமைச் செயலர் கே.சண்முகம், நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கியமான துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் தற்போதைய கரோனா பரவல் நிலவரம், சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

நீதிபதி பொன்.கலையரசன் குழு அளித்த அறிக்கை தொடர்பான சில முக்கிய விஷயங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன்படி, நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்டிஇ) 1 முதல் 8-ம் வகுப்பு வரை படித்து, அதன்பின் 9 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் இந்த 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் வாய்ப்பு வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அவசர சட்டம்

அமைச்சரவை ஒப்புதலைத் தொடர்ந்து, விரைவில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளது. இதன்மூலம் இந்த கல்வியாண்டு முதலே 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ள தாக கூறப்படுகிறது.

இதுதவிர, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் கிரீமிலேயர் பிரிவினருக்கான தகுதி நிர்ணயம், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக் கீடு ஆகிய விவகாரங்கள் குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதவிர, ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் மின்சார வாகன தொழிற்சாலை உட்பட 6 தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அரசுத் துறை வட் டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x