Last Updated : 14 Jul, 2020 09:10 PM

 

Published : 14 Jul 2020 09:10 PM
Last Updated : 14 Jul 2020 09:10 PM

கும்பகோணம் காய்கறிச் சந்தையில் 20 வியாபாரிகளுக்கு கரோனா தொற்று; சுற்றியுள்ள கடைகளையும் மூட ஆட்சியர் உத்தரவு

கும்பகோணம் காய்கறிச் சந்தை.

கும்பகோணம்

கும்பகோணம் காய்கறிச் சந்தையில் உள்ள 20 வியாபாரிகளுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து சந்தை இரண்டாவது முறையாக மூடப்பட்டது.

தமிழகத்தில் கோயம்பேடு, ஒட்டன்சத்திரம் சந்தைகளுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய காய்கறிச் சந்தையாக இருப்பது கும்பகோணம் அண்ணா, நேரு காய்கறி மொத்த மற்றும் சில்லறை விற்பனை சந்தை.
இந்தச் சந்தைக்கு மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான டன்களில் உருளை, வெங்காயம் உள்ளிட்ட அனைத்துக் காய்கறிகளும் லாரிகளில் வந்து விற்பனை செய்யப்படும். அதிகாலை 2 மணிக்குத் தொடங்கி காலை 6 மணிக்குள் மொத்த வியாபாரம் முடிந்துவிடும்.

இங்கிருந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தினமும் காய்கறிகள் செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த மே மாதம் கும்பகோணம் சந்தைக்கு வந்த லாரி ஒட்டுநர் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதியானதை அடுத்து சந்தை மூடப்பட்டது. பின்னர் 15 தினங்கள் கழித்து மீண்டும் சந்தை திறக்கப்பட்டது.

அப்போது மொத்த வியாபாரம் மட்டும் சந்தையில் நடைபெற்றது. மக்கள் கூட்டத்தைக் குறைக்கும் வகையில் சில்லரை வியாபாரத்தினை அருகில் உள்ள பள்ளி மைதானத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் மீண்டும் காய்கறிச் சந்தையில் மூவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து இன்று (ஜூலை 14) சந்தை மூடப்பட்டது. பின்னர் சந்தையோடு தொடர்பில் இருந்த வியாபாரிகள் 300 பேருக்குக் காரனேசன் அரசு மருத்துவமனையில் இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 20 பேருக்குக் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அனைவரையும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.

இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் இன்று கும்பகோணம் மொத்த காய்கறிச் சந்தை, சில்லறை விற்பனை நடைபெறும் இடம், காரனேசன் மருத்துவமனை ஆகிய இடங்களில் பார்வையிட்டு வருவாய் கோட்டாட்சியர் விஜயன், வட்டாட்சியர் பாலசுப்ரமணியன், நகராட்சி ஆணையர் லெட்சுமி, நகர்நல அலுவலர் பிரேமா மற்றும் அலுவலர்களுடன் கரோனா பரவல் தொடர்பாக ஆலோசித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் கூறியதாவது:

"கும்பகோணம் காய்கறிச் சந்தையில் மொத்த விற்பனை மட்டும் நடைபெற்றது. நகராட்சிப் பகுதியில் உள்ள பள்ளி மைதானங்களில் சில்லறை விற்பனைக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பொதுமக்களின் கூட்ட நெருக்கடி குறைக்கப்பட்டு வியாபாரம் நடக்கிறது.

இருப்பினும் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களிடம் இருந்து கும்பகோணம் சந்தையில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு 3 பேருக்கு மட்டும் தொற்று கண்டறியப்பட்டது. இதனால் சந்தை மூடப்பட்டது.

மேலும், சந்தைக்கு வெளியே உள்ள சில கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதில் 300 வியாபாரிகளுக்கு பரிசோதித்ததில் இன்று 20 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 300 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

கும்பகோணம் நகராட்சிப் பகுதியில் மார்ச் 24-ம் தேதி தொடங்கி இன்று வரை 129 பேருக்குக் கரோனா தொற்று உள்ளது. எனவே தொடர்ந்து தனி நபர் இடைவெளி, கை கழுவுதல், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சந்தை அருகே உள்ள 2 டாஸ்மாக் கடைகளும், சந்தை திறக்கும் வரை மூடப்படுகிறது.

வணிக நிறுவனங்கள் திறந்திருக்கும் நேரத்தைக் குறைப்பது தொடர்பாக வர்த்தகர்களுடன் அதிகாரிகள் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்கள்"

இவ்வாறு ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x