Published : 14 Jul 2020 05:27 PM
Last Updated : 14 Jul 2020 05:27 PM
கிராமங்களைக் கைவிடும் எந்த சமூகமும் வளர்ந்த நாகரிகமான சமூகம் அல்ல என்று கமல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. தற்போது சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் குறைந்து வந்தாலும், சென்னையைத் தாண்டி இதர மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"காத்திடுவோம் நம் கிராமங்களை, கரோனா தொற்றிலிருந்து. விமானங்களில் இருந்து வந்திறங்கிய கரோனா, இன்று நம் கிராமங்கள் வரை சென்றடைந்திருக்கிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டும் இருக்கும் கிராமப் புறங்களில், கரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்புகள் கவலையளிக்கிறது என்று ஏற்கெனவே நாம் சொல்லியிருந்தோம். அந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கும் நிலையினைக் காணும்போது, அரசுகள் கிராமங்களின் மீது அக்கறையின்றி செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
திறந்து கிடக்கும் சாக்கடைக் குழிகள், குப்பைகள் நிறைந்த வளாகங்கள், பணியாளர்கள் பற்றாக்குறையுடன் மருத்துவமனைகள், உபகரணங்கள் இல்லாத பணியாளர்கள் என கிராமப்புறங்களின் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தி விட்டு, நகரங்களைக் கட்டமைத்திருக்கிறது அரசு எந்திரம். இந்தக் கரோனா காலத்திலும் அதே தவறைச் செய்யாமல் கிராமங்களை அரசு காத்திட வேண்டும் என்கின்ற ஒரு கோரிக்கைக் குரல் இது.
நகரங்களின் ஊரடங்கு பொருளாதாரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். ஆனால் கிராமங்களில் ஊரடங்கு என்பது உணவுப் பஞ்சத்தையும், பட்டினியையும் தொடங்கிவிடும் என்பதை அரசு மறந்து விடக்கூடாது. வருமுன் காத்திடுங்கள் என்ற குரலைப் புறந்தள்ளி இருக்கிறது இவ்வரசு.
தொற்று பரவத் தொடங்கிவிட்ட இக்காலத்தில் விரைந்து காத்திடுவோம் என்ற குரலோடு வருகிறோம். கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார மையங்களில் இந்த நோய்த்தொற்றினைக் கட்டுப்படுத்தத் தேவையான உபகரணங்கள் போதுமான அளவு கையிருப்பில் வைக்கப்பட வேண்டும்.
பராமரிப்பின்றி இருக்கும் ஆரம்ப சுகாதார மையங்கள் சீரமைக்கப்பட்டு, போதுமான பணியாளர்கள், பாதுகாப்புக் கருவிகள், உயிர்காக்கும் மருந்துகள் அங்கே இருந்திட வழி செய்ய வேண்டும்.
மக்களுக்குச் சரியான விழிப்புணர்வினை ஏற்படுத்தி நோய்த்தொற்று குறித்த தேவையற்ற பயத்தையும் போக்கிட தீவிரமான முயற்சிகள் கையிலெடுக்கப்பட வேண்டும். கிராமங்களைக் கைவிடும் எந்தச் சமூகமும் வளர்ந்த நாகரிகமான சமூகம் அல்ல, அது வளர்ச்சியுமல்ல என்பதை வரலாறு உணர்த்தியிருக்கிறது.
இன்று நடக்கும் இந்த அலட்சியப் போக்கினை நாளைய வரலாற்றில் நாம் எவ்வாறு பதிவிடப் போகிறோம் என்ற கேள்வியோடும், அக்கறையோடும் சொல்கிறேன். கிராமங்களைக் காத்திடுவோம்".
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT