Published : 17 Sep 2015 09:15 PM
Last Updated : 17 Sep 2015 09:15 PM
திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத்தை ஏற்றும் பருவத ராஜகுல சமூகத்தினர், சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்ட பிறகுதான், அண்ணாமலை மீது கால் பதிக்கின்றனர். அத்தகைய தொன்மை வாய்ந்த அண்ணாமலைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயிலில் இருந்து ரமண ஆசிரமம் வரை மலையடிவாரம் மற்றும் மலை மீது ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. புதிது புதிதாக கோயில்கள் கட்டப்படுகின்றன.
மேலும் ஆசிரமங்களும் கட்டப் பட்டு, அதனை விரிவாக்கம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. அதற்காக, அண்ணாமலையில் உள்ள பாறைகளை உடைத்தும், மரங்களை வெட்டியும் சிதைக்கும் பணி தடையின்றி நடைபெறுகிறது.
முலைப்பால் தீர்த்தம் அருகே ஆசிரம விரிவாக்கத்துக்காக மரங் கள் வெட்டப்பட்டு பாறைகளை உடைக்கும் பணி நடக்கிறது. மேலும், பாலதண்டாயுதபாணி கோயில் கட்டுவதற்காக சுமார் 6 ஆயிரம் சதுரடி மலையை குடைந்து, மரங்களை வெட்டி கட்டிடம் எழுப்பி உள்ளனர்.
பின்னர் வேறு இடத்துக்கு கோயிலை மாற்றிவிட்டதால், கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. மெல்ல மெல்ல சிதைக்கப்படும் அண்ணாமலையை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆன்மிகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
கடும் நடவடிக்கை
இதுகுறித்து பாஜக கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன் கூறும்போது, “ஆசிரமம், கோயில் என்ற பெயரில் மலையை சேதப்படுத்தி வருகின்றனர்.
இந்த செயல் பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது. தெய்வ மாக திகழும் மலையை பாதுகாக் காமல் அரசாங்கம் இருப்பது வேதனை அளிக்கிறது. அண்ணா மலையை சேதப்படுத்துபவர் கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்’’ என்றார்.
புனிதம் கெடுகிறது
மோகன் சாது கூறும்போது, “அண்ணாமலையில் உள்ள குகை களிலும், குகை இடுக்குகளிலும் சித்தர்களும், ஞானிகளும் வாழ்ந்தனர். அவர்கள் தங்களுக்கு என்று எந்த ஆசிரமங்களையும் கட்டவில்லை. பிற்காலத்தில் வந்த அவர்களது வம்சத்தினர், பாறைகளை உடைத்து, மரங்களை வெட்டி கட்டிடங்களை எழுப்பி உள்ளனர். சாதுக்கள், சன்னி யாசிகள் என்ற பெயரில் போலி சாமியார்கள் ஆன்மிகவாதிகளாக வலம் வந்து சுயலாபத்துக்காகவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும் அண்ணாமலையை வியாபார தலமாக மாற்றிவிட்டனர்.
மலையில் ஆசிரமங்களை கட்டியும், குடிசைகளை போட்டும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதால் மலை யின் புனிதம் கெடுகிறது” என்றார்.
1 கி.மீ. உயரத்துக்கு ஆக்கிரமிப்பு
இந்து முன்னணி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சங்கர் கூறும்போது, “தரைமட்டத்தில் இருந்து அண்ணா மலையில் 1 கி.மீ. உயரத்துக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆசிரமம் என்ற பெயரில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. எந்த அனுமதியும் இல்லாமல் மரங்களை வெட்டியும், பாறைகளை உடைத்து கட்டிடங்களை கட்டுகின் றனர்.
மலையில் உள்ள இடத்தை ஆக்கிரமித்து குடிசை போட்டு, பின்னர் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT