Published : 14 Jul 2020 12:57 PM
Last Updated : 14 Jul 2020 12:57 PM

கரோனா பாதிப்பு; யோகா, இயற்கை மருத்துவ சிகிச்சை மூலம் 61 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்; அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

அமைச்சர் விஜயபாஸ்கர்: கோப்புப்படம்

சென்னை

தமிழ்நாடு முதல்வர் உத்தரவின் பேரில் இதுவரை 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு யோகா பயிற்சிகள் மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஜூலை 14) வெளியிட்ட அறிக்கை:

"தமிழக அரசு, தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையுடன் சித்தா மற்றும் யோகா சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்கள் தொடர்ந்து மூச்சுப் பயிற்சிகளை மேற்கொண்டால் நுரையீரலின் செயல்திறன் அதிகரித்து சுவாசப் பாதைகள் சீராகும். மேலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க எளிய முறையிலான சில ஆசனங்களும் வழிவகுக்கின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் இடங்களுக்கே சென்று இப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதனைத் தவிர, மூலிகை பானங்கள், நவதானிய வகைகள், சிறு தானியங்கள் உள்ளிட்ட ஆரோக்கிய உணவுகளும், நீராவி பிடித்தல், சுவாசத்திற்கான நறுமணச் சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. இப்பணிகளில் 200-க்கும் மேற்பட்ட அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத் தலைமை மருத்துவமனை, வட்ட மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையங்கள் என 86 இடங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் இதுவரை 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். தேவையின் அடிப்படையில் இச்சிகிச்சை முறைகள் மேலும் விரிவுபடுத்தப்படும்.

தமிழ்நாடு முதல்வரின் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் தமிழகத்தில் கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்".

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x