Published : 14 Jul 2020 11:54 AM
Last Updated : 14 Jul 2020 11:54 AM
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் இளஞ்சிறார் நீதிச் சட்டம் அடிப்படையில் 'சைல்ட் ஃப்ரண்ட்லி கார்னர்’ எனும் பெயரில் சிறுவர் விளையாட்டு அறைகளைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரெத்தினம் தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் விளையாட்டு அறையினைத் திறந்து வைத்துப் பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரெத்தினம், “எதிர்பாராத சூழ்நிலையில் பெற்றோருடனோ, காப்பாளருடனோ குழந்தைகள் அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. அதுபோன்ற சூழலில் அந்தக் குழந்தைகளுக்கு தங்கள் வீட்டில் இருப்பது போன்ற, நல்ல பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தர வேண்டும். அந்த நோக்கத்தில்தான் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் குழந்தைகளுக்கெனத் தனியாக ஒரு இடம் அளிக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் குழந்தைகளுக்கென ஒரு சிறப்பு அறையை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கும், அரவணைப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கும் இந்த அறை நிழற்குடையாக இருக்கும். இந்த அறையில் குழந்தைகள் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்களோ அவ்வளவு நேரமும் அவர்களுடன் காவல் ஆய்வாளர் முதல் காவலர்கள் வரை உடன் இருந்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள்.
காவல் நிலையங்களுக்கு வரும் குழந்தைகள் அச்சமின்றித் தங்களின் வீடு மற்றும் பள்ளிக்கூடங்களில் இருப்பது போன்ற சூழலை உணரும் வகையில் இந்த சிறப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ‘சைல்ட் ஃபிரண்ட்லி கார்னர்’ என்ற சிறுவர் விளையாட்டு அறையானது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன்" என்றார் செல்வநாகரெத்தினம்.
இதற்கு முன்பே, கேரளத்தின் சில மாவட்டங்களில் இதுபோன்று காவல் நிலையங்களில் குழந்தைகளுக்கான விளையாட்டு அறைகள் அமைக்கப்பட்டு அது கேரள மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT