Published : 14 Jul 2020 10:21 AM
Last Updated : 14 Jul 2020 10:21 AM
முகமது நபியை பற்றி கார்ட்டூன் வெளியிடப்படும் என முகநூலில் பதிவிட்ட கார்ட்டூனிஸ்ட் வர்மா கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் அருகே கீழ்குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் (30). இவர், விழுப்புரம், சுதாகர் நகரில் ஐ.டி. அலுவலகம் வைத்துள்ளார். இவர், சமூக வலைதளத்தில் 'வர்மா கார்ட்டூனிஸ்ட்' என்ற பெயரில் கார்ட்டூன் படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் தற்போது 'கருப்பர்' என்ற யூ–டியூப் சேனலின் பின்னால் உள்ளவர்களை தலைவர்கள் முன்வந்து கண்டிக்க வேண்டும் என்றும் 'இந்துக்கள் பக்கம் நிற்கிறோம்' என முஸ்லிம்கள் உறுதி செய்வதோடு, இந்த சேனலுக்கு பின்னால் உள்ளவர்களை ஜமாத்களில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும், இதனை 24 மணி நேரத்தில் செய்யவில்லை என்றால், முஸ்லிம்களால் போற்றப்படும், முகமது நபியை பற்றி வேறு ஒருவர் பக்கத்தில் கார்ட்டூன் வெளியிடப்படும் என முகநூலில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' தொகுதி தலைவர் ரியாஸ் அலி, சுரேந்தரை கைது செய்ய கோரி, புகார் அளித்தார். மேலும், அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் சார்பில், முகமது ரஃபி என்பவர், விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இப்புகார்களின் பேரில், டிஎஸ்பி நல்லசிவம் தலைமையிலான காவல்துறையினர் 153(A), 295(A), 504, 505(I)(C), 505(II) ஆகிய பிரிவுகளின் கீழ் சுரேந்தரை நேற்று (ஜூலை 13) இரவு கைது செய்தனர். இந்த கைதை கண்டித்து இந்து மக்கள் கட்சி மாநில இணை பொதுச் செயலாளர் ஆசைத்தம்பி தலைமையில் சிலர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இவர் ஏற்கெனவே விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்டதாக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT