Published : 28 Sep 2015 07:25 AM
Last Updated : 28 Sep 2015 07:25 AM
சென்னை தீவுத்திடலில் 120 பட்டாசு கடைகளை அமைத்து வாடகைக்கு விடுவதற்கு அதிக தொகை கோரப்படுவதால், 2 முறை டெண்டர் விடப்பட்டும் யாரும் எடுக்க முன்வரவில்லை.
இதனால், மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் சிவ காசிக்கு பட்டாசு ஆர்டர் கொடுக் காமல் இருக்கின்றனர். இதனால் பட்டாசு தயாரிப்பு குறைந்து, தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டில் பாரிமுனையில் பட்டாசு கடை யொன்றில் தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் தீயணைப்பு வாகனம் நுழைய முடியாததால், தீ விபத்து ஏற்பட்ட கடையில் பணியாற்றிய 2 ஊழியர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதையடுத்து மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியான பந்தர் தெரு, பத்ரியன் தெரு, மலையப்பெருமாள் தெரு, ஆண்டர்சன் தெரு, அம்பர்சன் தெரு ஆகிய 5 தெருக்களில் பட்டா சுகள் விற்க தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மேற்கண்ட 5 தெருக்களில் கடைகள் அமைத்து பட்டாசு விற்க தடை விதித்ததுடன், திறந்தவெளி அரங்கில் கடைகளை அமைத்து பட்டாசு விற்க வியாபாரி களுக்கு ஏற்பாடு செய்து தரும்படியும் அரசுக்கு உத்தர விட்டது. அதன்படி, பட்டாசு கடைகள் அமைக்க சென்னை தீவுத்திடலில் சுமார் 4 லட்சம் சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டது. அங்கு 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் சென்னைப் பெருநகர பட்டாசு விற்பனையாளர்கள் சங்க உறுப் பினர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் 120 பட்டாசு கடைகள் ஒதுக்கப்பட்டன.
அந்த ஆண்டுகளில் பட்டாசு விற்பனைக்கான பாதுகாப்பான சூழல், போதிய அளவு வாக னங்கள் நிறுத்தும் வசதி, மழை யால் விற்பனை பாதிக்கக் கூடாது என்பதற்கான முன்னேற் பாடு என அனைத்தும் செய்யப் பட்டிருந்தது. அதற்கு பொது மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். பட்டாசு வியாபாரிக ளுக்கும் எதிர்பார்த்த லாபம் கிடைத்தது.
ஆனால், 2013-ம் ஆண்டில் தீவுத்திடலில் பட்டாசு கடைகள் நடத்துவதற்கான டெண்டரை அரசியல்வாதிகள் எடுத்ததால், போதிய வசதியில்லாமல் 120 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்ட துடன் கடைக்கான வாடகையும் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டது. அதனால் பெரும்பாலான வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், இந்தாண்டு தீபாவளிக்கு தீவுத் திடலில் பட்டாசு கடைகள் நடத்த விரும்புவோர் டெண்டர் கோரலாம் என்று பத்திரிகைகளில் சுற்றுலாத் துறை விளம்பரம் வெளியிட்டது. குறைந்தபட்ச விலையாக ரூ.72 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. அந்த விலைக்கு டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை. இதையடுத்து டெண்டர் விலை ரூ.68 லட்சமாக குறைக்கப்பட்டு டெண்டர் கோரி மீண்டும் பத்திரிகைகளில் விளம் பரம் செய்யப்பட்டது. அந்த தொகைக்கும் கடைசி தேதி வரை டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை. இதையடுத்து என்ன செய்யலாம் என்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது சுற்று லாத் துறை. பட்டாசு வியாபாரிக ளுக்கும் அதே நிலைதான்.
இதுகுறித்து சென்னைப் பெருநகர பட்டாசு விற்பனையா ளர்கள் சங்கத் தலைவர் எம்.ஷேக் அப்துல்லா ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
தீவுத் திடலில் பட்டாசு கடைகள் நடத்த அதிக தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் 2 முறை டெண்டர் விடப்பட்டும் யாரும் எடுக்க முன்வரவில்லை. வழக்கமாக தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்பே தீவுத்திடலில் பட்டாசு கடைகள் நடத்துவதற்கான டெண்டர் விடப்பட்டு, கடைகளை அமைக்கும் பணி தொடங்கிவிடும். இந்தாண்டு இதுவரை டெண்டர் விடப்படாததால், கடைகள் அமைக்கும் பணியும் தாமத மாகிறது. அதனால் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கவும் தாமதம் ஏற்படும்.
அதுபோல தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்பே சிவகாசியில் இருந்து பட்டாசு தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆர்டர் எடுக்க வந்துவிடுவார்கள். இந்தாண்டு இதுவரை யாரும் வரவில்லை. சிவகாசியிலும் பட்டாசுக்கான தேவை குறைவாக இருப்பதால் அங்கும் விற்பனை மந்தம் என்று கூறுகிறார்கள். தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பது உறுதியானால்தான் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் சிவகாசிக்கு ஆர்டர் கொடுப்பார்கள். ஆர்டர் கொடுக்க தாமதம் ஏற்பட்டால், பட்டாசு தயாரிப்பு குறைந்து, தட்டுப்பாடு ஏற்படும். அதனால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.
தீபாவளிக்கு இன்னும் 42 நாட்களே உள்ள நிலையில், தீவுத் திடலில் பட்டாசு கடைகள் நடத்த நியாயமான தொகைக்கு விரைவில் டெண்டர் கொடுத்தால் மட்டுமே சென்னைவாசிகளுக்கு நியாயமான விலைக்கு பட்டாசுகள் கிடைக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT