Published : 14 Jul 2020 09:56 AM
Last Updated : 14 Jul 2020 09:56 AM
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5,000 நேரடிப் பண உதவி உள்ளிட்ட ஆக்கபூர்வ முடிவுகளை முதல்வர் பழனிசாமி எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 14) வெளியிட்ட அறிக்கை:
"ஊரடங்கின் கோரப்பிடியில் சிக்கிய அடித்தட்டு மக்கள், ஏழை எளியவர்கள் எவ்வித வருமானமும் இன்றி, தேவைப்படும் எதையும் வாங்கும் சக்தியை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கிராமங்களில் பொருளாதாரமே நொறுங்கி, பணப் புழக்கத்தில் கடும் தேக்க நிலைமை ஏற்பட்டிருக்கிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமும் உற்ற துணையாக இல்லை. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கூலி வேலைக்குப் போவோர், அமைப்புசாராத் தொழிலாளர்கள் எல்லாம் அடுத்த வேளை உணவுக்கே அவதிப்படும் நிலை ஏற்பட்டு, தங்களின் எதிர்காலம் எப்படிப் போகும் என்ற கவலையில் இருக்கிறார்கள்.
சென்னையில் கரோனா குறைவதாக எண்ணிக்கைகள் வெளிவந்தாலும், ஏற்கெனவே இறப்புகளை மறைத்த அதிமுக அரசு, இப்போது சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை, வீடு திரும்பியவர்களில் எத்தனை பேர் கரோனா நோய் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார்கள், மருத்துவமனையில் தற்போதுள்ள கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை, அதில் எத்தனை பேர் வென்டிலேட்டரில் இருக்கிறார்கள் என்பது பற்றிய வெளிப்படைத்தன்மையான விவரங்களை எல்லாம் அதிமுக அரசிடம் எதிர்பார்ப்பது வீண் வேலை என்ற நிலை உருவாகி விட்டது.
திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பால், மாவட்டங்களில் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால், இன்றைக்குத் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கரோனா கொத்துக் கொத்தாக பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆகவே, மாவட்டங்களில் வாழ்வாதாரப் பிரச்சினை அச்சமூட்டும் வடிவம் எடுத்து, வருமான இழப்பு வரலாறு காணாத வகையில் ஏற்பட்டிருக்கிறது.
இப்படியொரு நெருக்கடியான சூழலில் இன்று கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5,000 ரூபாய் பண உதவி வழங்குவது, கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள அனைத்து நகைக்கடன்களையும் ரத்து செய்வது, விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வது, கரோனா காலத்திற்கு வீட்டுப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தில் சலுகை அறிவிப்பது, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் மின்கட்டண சலுகை அளிப்பது, மாணவர்களின் அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்வது ஆகியவற்றைப் பரிசீலித்து மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் தமிழக அமைச்சரவையில் ஆக்கபூர்வமான முடிவெடுத்திட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவற்றைத் தவிர, மற்ற திட்டச் செயலாக்கத்திற்கான நிதி ஒதுக்கீடு, டெண்டர் வெளியீடு, சமூகத்தைப் பாதிக்கும் திட்டங்களில் ஈடுபாடு ஆகியவை குறித்து நெருக்கடியான இந்த கால கட்டத்தில் விவாதிப்பதைத் தவிர்த்திடுதல் நன்று. தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிட வேண்டிய தலையாய பொறுப்பு அரசுக்குள்ளது என்பதை உணர்ந்து அமைச்சரவைக் கூட்டத்தில் நல்லதொரு முடிவினை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment