Published : 14 Jul 2020 09:54 AM
Last Updated : 14 Jul 2020 09:54 AM
மீனவர்கள் பிரச்சினையில் தமிழக அரசு இருப்பிரிவினரையும் அழைத்துப் பேசி ஓர் நிரந்தர தீர்வு காண வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூலை 14) வெளியிட்ட அறிக்கை:
"தமிழகத்தில் மீன் பிடிப்பதில் மீனவர்கள் இரு தரப்பினர்களுக்கிடையே நீண்டகாலமாக மோதல்கள் இருந்து வருகிறது. ஒரு பிரிவினர் சுருக்குமடி வலையை பயன்படுத்துக் கூடாது என்றும் மற்றொரு பிரிவினர் சுருக்குமடி வலையை பயன்படுத்துவது தவறில்லை என்றும் இருவருக்கிடையே நாளுக்குநாள் மோதல் வலுத்து வருகிறது. இந்த பிரச்சினையில் தமிழக அரசு இருப்பிரிவினரையும் அழைத்துப் பேசி ஓர் நிரந்தர தீர்வு காண வேண்டும்.
மீனவர்களில் ஒரு பிரிவினர் சுருக்குமடி வலை பயன்படுத்துவதில் சில மாற்றங்களுடன் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் சுருக்குமடி வலைக்கு தடையில்லாமல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக, கேரளா அரசு சுருக்குமடி வலை வாங்க 40% விகிதம் மானியம் அளிக்கிறது. தமிழக அரசு கடந்த வருடங்களில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்கியதுப் போல் இந்த வருடமும் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
அதோடு, சுருக்குமடி வலை படகு தயார் செய்ய ஒரு கோடி ரூபாய் முதல் ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். இந்த சுருக்குமடி வலையை பயன்படுத்தக் கூடாது என்று தடைவிதித்தால் இத்தொழிலையே நம்பி இருக்கும் இரண்டு லட்சம் குடும்பம் நேரடியாக பாதிக்கப்படுவார்கள். அதோடு, சுருக்குமடி வலைக்கு தடைவித்துள்ளது என்று கூறுகிறார்களே ஓழிய அது சம்பந்தமாக தவல்கள் யாருக்கும் தெரியாது. தமிழக அரசு இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆகவே, தங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க சுருக்குமடி வலையை தாங்கள் தொடர்ந்து பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
ஆனால், சாதாரண மீனவர்கள், சுருக்குமடி வலையினால் மீன் பிடிப்பதனால் அவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதிக்கின்றனர். எங்களுக்கு மீன் கிடைக்காமல் எங்களுடைய வாழ்வாதாரம் அழிந்துவிட்டது. நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடுகிறோம். ஏற்கெனவே சுருக்குமடி வலை பயன்படுத்துவதை தமிழக அரசு தடைசெய்துள்ளது. ஆகவே, சுருக்குமடி வலையால் மீன் பிடிக்க அரசு அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை வைக்கின்றனர்.
ஆகவே, தமிழக அரசு ஒரு குழுவை நியமித்து இரண்டு பிரிவினரையும் அழைத்துப் பேசி ஒரு சுமூகமான நிரந்தர முடிவை எடுக்கு வேண்டும் என்று தமிழக அரசை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT