Published : 13 Jul 2020 09:55 PM
Last Updated : 13 Jul 2020 09:55 PM
மத்திய அரசின் உத்தரவை மீறி கடன் தொகையை வசூல் செய்யும் நுண் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை மகளிர் சுய உதவிக்குழுவினர் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு இன்று காலை மகளிர் சுய உதவிக்குழுவினர் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் விஜயாவிடம் வழங்கிய மனுவில், கோவில்பட்டி நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் நுண் நிதிநிறுவனங்கள் பகுதிவாரியாக மகளிர் சுய உதவிக்குழுக்களை நிர்மாணித்து கடனுதவி வழங்கி வருகின்றன.
கடன் தொகையை திட்டத்துக்கு தகுந்தபடி வார மற்றும் மாத தவணை முறையில் மகளிர் சுய உதவிக்குழுவினர் திரும்பச் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது மத்திய மாநில அரசுகள் கடன் தொகையை திரும்ப செலுத்த சிறிது கால இடைவெளி அறிவித்தன. ஆனால் நுண் நிதி நிறுவனங்கள் அரசு உத்தரவை மீறி ஊரடங்கு காலத்திலும் கடன் தொகையை சம்பந்தப்பட்ட குழுவினரின் வீடு தேடி சென்று மிரட்டி பணம் வசூல் செய்து வருகின்றனர்.
ஏற்கெனவே சரியாக வேலை இல்லாமல் கூலித் தொழிலில் ஈடுபட்டு வரும் மக்கள் தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு நுண் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும், என தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT