Published : 13 Jul 2020 09:38 PM
Last Updated : 13 Jul 2020 09:38 PM
நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் உள்ள காவல்துறையினர் விழிப்புடன் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பணியாற்ற வேண்டும் என தூத்துக்குடி எஸ்.பி. எஸ்.ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் நெடுஞ்சாலை ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ள முத்தையாபுரம், திருச்செந்தூர், செய்துங்கநல்லூர், புதுக்கோட்டை, எப்போதும் வென்றான், கயத்தாறு மற்றும் கிழக்கு கடற்கரை சாலை நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இன்று ஆய்வு செய்தார்.
மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் வைத்து வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, தேவையான உபகரணங்கள் இயங்கும் நிலையில் உள்ளனவா, முதலுதவிப்பெட்டி உள்ளதா என்பது குறித்து அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் உள்ள காவல்துறையினர் விழிப்புடன் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பணியாற்ற வேண்டும்.
விபத்து நடந்தால் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்று விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்க வேண்டும்.
ஆம்புலன்ஸ் வாகனங்களை எதிர்பார்த்து காலம் தாழ்த்தாமல் அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்க துரித நடவடிக்கை எடுத்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டும்.
வாகனத்தில் உள்ள ரிவால்விங் விளக்குகள் 24 மணி நேரமும் இயங்க வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து கடந்த வாரம் மாவட்ட காவல் துறையில் குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.
மேலும், ரூ.12,500 பணத்துடன் கீழே கிடந்த பர்ஸை எடுத்து காவல் நிலையம் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த கனகராஜ் என்பவருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT