Published : 13 Jul 2020 08:42 PM
Last Updated : 13 Jul 2020 08:42 PM
மதுரை நத்தம் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணியின் ஒரு பகுதியாக, மதுரை மாநகராட்சி அலுவலகம் முதல் ஊமச்சிகுளம் வரையிலான 7.5 கி.மீ தூரம், பறக்கும் பாலம் கட்டும் பணிகள் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தொடங்கின. மொத்தம் ரூ.1,028 கோடி மதிப்பீட்டிலான இந்தப் பணியில், பறக்கும் பாலம் கட்டுவதற்காக மட்டும் ரூ.612 கோடி ஒதுக்கப்பட்டது.
மொத்தம் 225 தூண்கள் கொண்ட இந்தப் பாலப் பணியைத் துரிதமாக முடிக்கும் பொருட்டு, மாநகராட்சி அலுவலகம் - ஊமச்சிகுளம் வரை ஒரே நேரத்தில் குழி தோண்டுதல், மின் கம்பங்களை மாற்றியமைத்தல், தூண்கள் கட்டுதல் போன்ற பணிகள் தொடங்கின. மின்னல் வேகத்தில் வேலைகள் நடந்தன. பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டதும் சுமார் 21 நாட்கள் இந்தப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. பிறகு அரசு கட்டுமானப் பணிகளுக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பணிகள் வேகமெடுத்தன.
ஆனால், நாளடைவில் வடமாநிலத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊருக்குப் போய்விட்டார்கள். இதனால் பணிகள் சுணக்கமடைந்துள்ளன. ஒரே நேரத்தில் சுமார் 500 தொழிலாளர்கள் ஈடுபட்ட இந்தப் பணியில் தற்போது வெறுமனே 100 பேர் கூட வேலை பார்க்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி பணிகள் நிறைவடைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அங்கே கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் சப் காண்ட்ராக்டர் மலைச்சாமியிடம் கேட்டபோது, "அரசு நிர்ணயித்த தொகைக்குள் கட்டுமான வேலைகளை முடித்து, லாபமும் பார்க்க வேண்டும். நம்மூர்த் தொழிலாளிகள் இப்போதெல்லாம் கடின உழைப்பைத் தருவதில்லை. வடமாநிலத் தொழிலாளர்கள் கூடுதல் நேரம் வேலை பார்ப்பதுடன், சம்பளமும் குறைவாகப் பெறுவார்கள்.
நம்மூர்த் தொழிலாளர்கள் குறைந்த வேலைக்குச் சம்பளமும் கூடுதலாகக் கேட்கிறார்கள். அதனால், எஞ்சியிருக்கிற வடமாநிலத் தொழிலாளர்களைக் கொண்டே வேலைகளைச் செய்கிறோம். சொந்த ஊர் திரும்பிய வடமாநிலத் தொழிலாளர்கள் அங்கே பிழைப்புக்கு வழியில்லாமல் இருக்கிறார்கள். இங்கே வர ஆர்வமாக இருந்தாலும் ரயில் இல்லை. நிலைமை சீரானால்தான் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT