Published : 13 Jul 2020 03:30 PM
Last Updated : 13 Jul 2020 03:30 PM
பாரதி ஆய்வாளர் இளசை மணியன் எட்டயபுரத்தில் காலமானார். அவருக்கு வயது 77.
எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன். இவர் எட்டயபுரத்தில் உள்ள பாரதி இல்லத்தில் காப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
பாரதி மீது தீராத பற்றுக் கொண்ட இவர் இளசை மணியன் என்ற பெயரில் பாரதி ஆய்வு மேற்கொண்டு வந்தார்.
இவருக்கு நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட இளசை மணியன், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எட்டயபுரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்ட இளசை மணியன் உடலுக்கு பாரதி அன்பர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தினர்.
இலக்கிய திறனாய்வு, வரலாற்று ஆய்வு, கவிதை, கதை மொழிபெயர்ப்பு, செய்தி விமர்சனம், இலக்கிய விழாக்கள், வீதி நாடகம் நடத்துவது என பல்வேறு பணிகளை செய்து வந்தார்.
இவர் எழுதிய ’பாரதி தரிசனம்’ என்ற நூல் 2 பாகங்கள் வெளி வந்துள்ளன. இதேபோல் பாரதியும் மத நல்லிணக்கமும், பாரதியும் சோசலிசமும், பாரதியும் ரஷ்யப் புரட்சியும், ஊணர் செய்த சதி (பாரதி வாழ்வில் நடந்த சம்பவம்) ஆகிய ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல் எழுதி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு கடந்தாண்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மகாகவி பாரதி விருது வழங்கி கவுரவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT