Published : 13 Jul 2020 05:03 PM
Last Updated : 13 Jul 2020 05:03 PM
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவில் இறந்தோர் உடலை பேக் செய்ய ஒருவர் மட்டுமே இருப்பதால் மருத்துவமனை ஊழியர்கள் சிரமமடைந்து வருகின்றனர். இதனால், இறந்தோரின் உடலை இறுதிச் சடங்கிற்கு எடுத்துச் செல்வதில் தாமதமும் ஏற்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர், அறிகுறி தென்படுவோரை சுகாதாரத்துறையினர் ரத்த, சளி மாதிரிகளை பரிசோதித்து வருகின்றனர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதேபோல் கரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கையும் 20-ஐ கடந்துள்ளது. தவிர, தனிமைப்படுத்த வார்டில் அறிகுறியுடன் இருந்த 10-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். சமீபகாலமாக சராசரியாக ஒரு நாளுக்கு 2 முதல் 5 பேர் வரை இறந்து வருகின்றனர்.
கரோனா வார்டு, தனிமைப்படுத்த வார்டுகளில் இறந்தோரின் உடலை உரிய விதிமுறைப்படி பேக் செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும், என இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் இறந்தோரின் உடலை பேக் செய்வதற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். அவரே விடுமுறையின்றி 24 மணி நேரமும் பணி செய்து வருகிறார்.
அவர் பேக் செய்வதற்கு சில சமயங்களில் அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் உதவி செய்கின்றனர். ஓட்டுநர்கள் இல்லாத நேரங்களில் இறந்தோரின் உறவினர்கள் உதவியோடு பேக் செய்கின்றனர். உறவினர்கள் மறுத்தால் பேக் செய்வதற்கு தாமதம் ஏற்படுகிறது. கடந்த வாரம் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்தார். முந்தைய நாள் இறந்த அவரது உடல் மறுநாள் இரவு தான் பேக் செய்து இறுதிச்சடங்குக்காக ஒப்படைக்கப்பட்டது.
இதனால் இறந்தோர் உடலை பேக் செய்யவதற்கு கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் மீனா கூறுகையில், "தற்போது ஒரே ஒரு நிரந்தர ஊழியர் தான் இருக்கிறார். ஆகையால் மாதம் ரூ.7000-ம் சம்பளத்தில் கூடுதலாக ஒரு பணியாளரை நியமிக்க முயற்சித்து வருகிறோம். ஆனால், இப்பணியை மேற்கொள்ள யாரும் முன்வர மறுக்கின்றனர். விரைவில் தீர்வு எட்டப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT