Published : 13 Jul 2020 11:59 AM
Last Updated : 13 Jul 2020 11:59 AM
முடங்கிய தொழிலுக்கு மறுவடிவம் கொடுத்த தையல் கலைஞர் நிஷாந்த், மூலிகைக் கவசத் தயாரிப்பில் வருவாய் ஈட்டி வருகிறார்.
கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதையும் முடக்கிப் போட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்றால், பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். இத்தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊடரங்கு அமலில் உள்ளது.
இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கிவிட்டன. இவற்றில் தையல் தொழிலையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். துணி உற்பத்தி, விற்பனை நிறுத்தப்பட்டு பின்னர் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில், வாங்கும் திறன் மற்றும் தேவை பொதுமக்களிடையே மிகவும் குறைந்துள்ளது. இதனால் தையல் கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சிலர் போதிய வாய்ப்புகள் இல்லாமையால் வேறு தொழில்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனர்.
மூலிகை முகக்கவசம் தயாரிப்பு
இந்நிலையில் கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த தையல் கலைஞர் நிஷாந்த் (27) என்பவர், தனது தையல் தொழில் முற்றிலும் முடங்கிய நிலையில், மாற்றுத் தொழிலுக்கு மாறும் முயற்சியில் இறங்கியபோது, நண்பர்களின் ஆலோசனையின் பேரில், தையல் பணி சார்ந்து மதிப்புக்கூட்டிய தொழிலைக் கையில் எடுத்து, விழுந்து கிடந்த வாழ்வாதாரத்தைத் தூக்கி நிறுத்தியுள்ளார்.
அவரைச் சந்தித்தோம்.
“கரோனா வைரஸ் தொற்றால் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் தொழில் செய்ய முடியவில்லை. சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகே கடையைத் திறந்து பணியைத் தொடங்கினேன். வாடிக்கையாளர்கள் துணி தைப்பதற்கு வரவில்லை. இவ்வாறே பல நாட்கள் நகர்ந்தன. குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பு, வீட்டு வாடகை, கடை வாடகை போன்றவை கூடுதல் சுமையானது. இதையடுத்து மாற்றுத் தொழிலைத் தேடி அலைந்தபோது, சரியான வேலையும் கிடைக்கவில்லை. கரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் வேலை கொடுக்க பலர் முன்வரவில்லை. தையல் தொழிலைத் தவிர வேறெந்தத் தொழிலும் எனக்குத் தெரியாது.
முகக்கவசங்கள் தைத்து விற்கலாம் என்றால், திரும்பிய பக்கமெல்லாம் மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மருத்துவ குணமிக்க மூலிகை முகக் கவசங்களுக்குத் தேவை இருப்பதை நண்பர்கள் வழியாக அறிந்தேன். அதை வடிவமைக்கும் முறைகளைக் கற்றுக்கொண்டு, பணியில் இறங்கினேன். சில நாட்கள் சற்று சிரமமாக இருந்தது. பின்னர் பழகிவிட்டது.
வாடிக்கையாளர்களின் விருப்பம்
வாடிக்கையாளர்களுக்கு தரமான முகக் கவசங்களைத் தயாரித்து வழங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருந்தது. டவுன்ஹால் பகுதியில் உள்ள துணிக்கடைகளில் முகக் கவசங்கள் தைப்பதற்கேற்ற துணிகள் மற்றும் வெட்டிவேர் மூலிகை ஆகியவற்றை வாங்கி வந்து, நண்பர்கள் உதவியுடன் முகக்கவசம் தைக்கத் தொடங்கினேன். ஆரம்பத்தில் ஒன்று, இரண்டு என விற்பனையானது. நண்பர்களும் வாங்கிச் சென்று தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு விற்பனை செய்து கொடுத்தனர்.
பின்னர் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகளுக்குக் கொண்டுசென்று விற்பனை செய்தேன். தயாரிப்பு நன்றாக இருந்தால், அவர்கள் மீண்டும் மீண்டும் அழைத்து வாங்கத் தொடங்கினர். இது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான நிறங்களிலும் தைத்துக் கொடுத்தேன். அவர்களுக்குப் பிடித்துப் போக, தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் வாங்கிக் கொடுத்தனர். தற்போது வெட்டிவேர் முகக்கவச விற்பனை நன்றாக உள்ளது.
மாற்றுப் பாதையில் பயணம்
தையல் தொழில் என்பது துணி உற்பத்தி, விற்பனை, வாடிக்கையாளர் என மூன்று நிலைகளைக் கடந்தே எங்களை வந்தடைகிறது. ஆயத்த ஆடைகளின் வரவால் தையல் தொழிலுக்கான தேவை, 'ஆல்ட்ரேஷன்' என்ற நிலைக்கு எப்போதோ தள்ளப்பட்டுவிட்டது. கோவையில் பல இடங்களில் ஆடைகளை ஆல்ட்டர் செய்வதற்கென்றே தையல் கடைகள் உள்ளன. இந்நிலையில் இத்தொழிலை மட்டுமே நம்பியுள்ள தையல் கலைஞர்கள் மாற்றுப் பாதையில் பயணிக்க வேண்டிய காலச்சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது” என்றார், தையல் கலைஞர் நிஷாந்த்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT