Published : 13 Jul 2020 07:37 AM
Last Updated : 13 Jul 2020 07:37 AM
நமது பாரம்பரியக் கலையான வில்லிசையின் பக்கம் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று ‘வில்லிசை வேந்தர்’ சுப்பு ஆறுமுகம் தெரிவித்தார்.
‘வில்லுப்பாட்டு’ என்றதும் நினைவுக்கு வரும் பெயர் சுப்பு ஆறுமுகம். ‘வில்லிசை வேந்தர்’ என்று போற்றப்படும் அவர் திருநெல்வேலி மாவட்டம் புதுக்குளம் கிராமத்தில் 1928 ஜூலை 12-ம் தேதி பிறந்தார். சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனியில் மகள் பாரதியுடன் வசித்துவரும் சுப்பு ஆறுமுகம் நேற்று 93-வது வயதில் அடியெடுத்து வைத்தார். அவருடன் உரையாடியதில் இருந்து.
கரோனா ஊரடங்கு காலத்தில் நேரத்தை எப்படி செலவிடுகிறீர்கள்?
85 வயதோடு, வில்லுப்பாட்டு மேடைக்கு செல்வதை குறைத்துக்கொண்டு, எழுத்துப் பணியை தொடங்கினேன். நான் எழுதி முடித்துள்ள ‘திருக்குறள் அனுபவ உரை’ என்ற நூலை சிவாலயம் மோகன் விரைவில் வெளியிட உள்ளார். என் வாழ்க்கை வரலாற்றை 15 ஆண்டுகளுக்கு முன்பே என் மனைவி மகாலட்சுமி எழுதிவிட்டார். தற்போது கூடுதல் விவரங்களுடன் எனது சுயசரிதையை எழுதி வருகிறேன். இது அடுத்த ஆண்டு வெளிவரும். ஒரு புதினமும் எழுதி வருகிறேன்.
சினிமா, தொலைக்காட்சி, சமூக ஊடகங்களுக்கு மத்தியில் வில்லுப்பாட்டு போன்ற பாரம்பரிய கிராமியக் கலைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
அந்த காலத்தில் திரைப்படத்தால் வில்லுப்பாட்டுக் கலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தொலைக்காட்சி சேனல்கள் வருகையின்போது சற்று தொய்வு ஏற்பட்டாலும், ஒருசில சேனல்கள் வில்லிசையை வளர்த்தன என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும். சினிமா மயக்கத்தால் வில்லிசைக்கு பாதிப்பு இல்லை என்பதற்கு ‘உத்தமவில்லன்’ படமே சான்று. தற்போது பல்வேறு கலைகள் பெருகியுள்ளன. எனவே, வில்லிசைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அது இன்னும் வளரும்.
வில்லுப்பாட்டு கலையை இளம் தலைமுறையிடம் கொண்டுசெல்ல என் னென்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர் கள்?
வில்லிசை பணியை என் மகள் பாரதி, மருமகன் திருமகன், பேரன் கலைமகன் ஆகியோர் தொடர்கின்றனர். எனது 90-வது பிறந்தநாளில் எனது பேரன், சுப்பு ஆறுமுகம் ஃபைன் ஆர்ட்ஸ் சென்டர் என்ற பயிற்சி மையம் தொடங்கினார்.
இந்த அமைப்பு மூலமாக மாணவர்களுக்கு கர்னாடக இசை, வில்லிசை பாடல்கள் சொல்லித் தருகிறோம். பள்ளிகளில் பயிற்சி முகாம்கள் நடத்துகிறோம். நமது பாரம்பரியக் கலையான வில்லிசையின் பக்கம் இன்றைய இளைஞர்கள் திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
70 ஆண்டு கலைப் பயணம்
சுப்பு ஆறுமுகம் 1948-ல் தொடங்கி, 70 ஆண்டுகளுக்கும் மேலான கலைப்பயணத்தில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவின் 147-வது ஆண்டு நிகழ்ச்சியில் தியாகப் பிரம்மத்தைப் பற்றி 2 மணி நேரத்துக்கு வில்லுப்பாட்டு கதை நிகழ்த்தினார். ஆன்மிகம், இலக்கியம் மட்டுமின்றி, மருத்துவம், அறிவியல், சமூக விழிப்புணர்வு என பல துறைகளிலும் வில்லிசைக் கச்சேரிகள் நிகழ்த்தக்கூடியவர். மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது, தமிழக அரசின் ‘கலைமாமணி’ உட்பட பல்வேறு விருதுகள், பட்டங்களைப் பெற்றவர். வில்லுப்பாட்டு தொடர்பாக ‘வில்லிசை மகாபாரதம்’, ‘வில்லிசை இராமாயணம்’, ‘நீங்களும் வில்லுப்பாட்டு பாடலாம்’ என 3 நூல்களை எழுதியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT