Published : 12 Jul 2020 06:23 PM
Last Updated : 12 Jul 2020 06:23 PM
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். பெரும்பாலான மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:
“தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.
செந்துறை (அரியலூர்), கோல்டன் பாறை (திருச்சி) பகுதிகளில் தலா 11 செ.மீ., திருச்சி, மைலம்பட்டி (கரூர்) பகுதிகளில் தலா 10 செ.மீ., லால்குடியில் (திருச்சி) 8 செ.மீ., திருச்சி விமான நிலையம், மருங்காபுரி (திருச்சி) பகுதிகளில் தலா 7 செ.மீ., காஞ்சிபுரம், இறையூர் (பெரம்பலூர்) பகுதிகளில் தலா 6 செ.மீ., கட்டா (நீலகிரி), சோளிங்கர் (ராணிப்பேட்டை), விருதுநகர், துவாக்குடி (திருச்சி), லப்பைக் குடிக்காடு (பெரம்பலூர்), ஆற்காடு (ராணிப்பேட்டை) பகுதிகளில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
ஜூலை 12-ம் தேதி அன்று லட்சத்தீவு, கடலோர கர்நாடகா, தெற்கு மகாராஷ்டிரம், மத்தியக் கிழக்கு வங்கக் கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 12 முதல் ஜூலை 16-ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 16-ம் தேதி கடலோர குஜராத் பகுதிகளில் சூறாவளிக் காற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்".
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT