Published : 12 Jul 2020 05:40 PM
Last Updated : 12 Jul 2020 05:40 PM
ஜி கார்னர் மார்க்கெட்டில் சில்லறை விற்பனைக்கு அனுமதியில்லை எனவும், பொதுமக்கள் அங்கு வந்தால் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜே.லோகநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஜூலை 12) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
"திருச்சி பொன்மலை ஜி-கார்னர் பகுதியில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தற்போது கரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில் பொதுமக்கள் சில நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது. பொன்மலை ஜி கார்னர் காய்கறி மார்க்கெட்டுக்கு மொத்த வியாபரிகள் மட்டுமே செல்ல வேண்டும்.
மொத்த வியாபாரிகள் காய்கறிகளை கொண்டு வரும் வாகனங்களில் 10 வாகனங்கள் மட்டுமே உள்ளே அனுப்பி வைக்கப்படும். அந்த 10 வாகனங்கள் காய்கறிகளை இறக்கிவிட்டு வெளியே வந்தபிறகு அடுத்த 10 வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படும். இதற்கு மொத்த வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேலும், மார்க்கெட்டுக்கு வரும் அனைத்து 2 சக்கர வாகனங்களும் ஜி-கார்னருக்கு இடதுபுறத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும். மீறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
மொத்த வியாபரிகளிடம் காய்கறிகள் கொள்முதல் செய்வதற்கு மட்டுமே சில்லறை வியாபாரிகள் அனுமதிக்கப்படுவர். அங்கு சில்லறை விற்பனை செய்ய அனுமதியில்லை. வாகனங்களில் காய்கறிகளை வாங்க வரும் சில்லறை வியாபாரிகள் ஜி-கார்னர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, பொன்மலை காவல் உதவி ஆணையர் அலுவலகம், சிண்டிகேட் வங்கி, செயின்ட் பீட்டர் சர்ச் வழியாக பழைய ரயில்வே எஸ்.பி. அலுவலகம் வழியாக வந்து சந்தையில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு ஜி-கார்னர், சர்வீஸ் ரோடு வழியாக வெளியே செல்ல வேண்டும்.
பொதுமக்கள் யாரும் ஜி-கார்னர் தற்காலிக காய்கறி மார்க்கெட்டுக்கு வர அனுமதியில்லை. மீறி வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மார்க்கெட்டுக்கு வரும் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தவறுபவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் மூலமாக அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும். மேலும், முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மார்க்கெட்டுக்குள் அனுமதிக்கப்படும். அனைத்து வியாபரிகளும், சுமைதூக்கும் தொழிலாளர்களும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
ஜி-கார்னர் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் நாளை (ஜூலை 13) முதல் 10 நுழைவு வாயில்களில் காவல்துறையினர் சோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சோதனைக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்"
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT