Published : 12 Jul 2020 03:55 PM
Last Updated : 12 Jul 2020 03:55 PM
திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை தொடங்கி இரவு வரை பெய்த பலத்த மழையால், கோட்டை ரயில்வே ஸ்டேஷன் மேம்பாலத்தின் சாலையோர தடுப்புச் சுவர் சரிந்து சேதமடைந்தது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மாதத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை மழை பெய்து வருகிறது. ஏப்ரலில் 2 நாட்களும், மே மாதத்தில் ஒரு நாளும், ஜூனில் 3 நாட்களும் மழை பெய்தது.
இந்தநிலையில், இந்த மாதம் இத்தனை நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று (ஜூலை 11) மாலை 6.40 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒன்றரை மணி நேரம் பலத்த மழையும், அதைத்தொடர்ந்து, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக லேசான மழையும் பெய்தது. திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,029 மி.மீ. மழை பதிவாகியது.
இந்த மழை காரணமாக சுமார் 150 ஆண்டுகள் பழமையான கோட்டை ரயில்வே ஸ்டேஷன் மேம்பாலத்தின் சாலையோர தடுப்புச் சுவர் தரைக்குள் உள்வாங்கிச் சரிந்து சேதமடைந்தது. இந்த மேம்பாலத்தை அகற்றிவிட்டு புதிய மேம்பாலம் விரைவில் கட்டப்படவுள்ளது. ஆனால், இந்த மேம்பாலம் திருச்சி மாநகரின் மிக முக்கியச் சாலைகளில் ஒன்றாக இருப்பதால், மாநகராட்சி ஊழியர்கள், நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து வந்து எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டியதுடன், சேதமடைந்த பகுதியை தற்காலிகமாகச் சீரமைக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலையெங்கும் குப்பைகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன. மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் சாக்கடைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. மாவட்டத்தில் உள்ள பழைய சுரங்கப் பாதைகள் அனைத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளன.
குறிப்பாக, திருச்சி மேலப்புதூர், கிராப்பட்டி பாரதிநகர், கிராப்பட்டி அன்புநகர் உட்பட பல்வேறு சுரங்கப் பாதைகளிலும் மழை தேங்கியுள்ளது. இந்தத் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற மாநகராட்சியோ, நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களோ நடவடிக்கை எடுக்கவில்லை. இருப்பினும், முழு ஊரடங்கால் வாகனங்கள் இயக்கப்படாததால் பாதிப்பு நேரிடவில்லை.
திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக பொன்மலையில் 108.40 மி.மீ. மழை பதிவாகியது. இதற்கடுத்து, திருச்சி நகரம் 98 மி.மீ., தேவிமங்கலத்தில் 92 மி.மீ., லால்குடியில் 81.40 மி.மீ. மழை பதிவாகியது.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):
திருச்சி விமான நிலையம் 75.40, திருச்சி ஜங்ஷன் 74, புள்ளம்பாடி 71.80, கள்ளக்குடி 65.80, மருங்காபுரி 65.40, துவாக்குடி 45, வாய்த்தலை அணைக்கட்டு 41.40, நந்தியாறு தலைப்பு 40, கோவில்பட்டி 25.20, மணப்பாறை 19.80, நவலூர் குட்டப்பட்டு 17, பொன்னணியாறு அணை 10.40, புலிவலம் 10, சிறுகுடி 7.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT