Published : 11 Jul 2020 09:54 PM
Last Updated : 11 Jul 2020 09:54 PM
தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக் கிழமைகள் அனைத்தும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும்.
தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இதில் ஜூலை 5-ம் தேதி வரை சென்னை உள்ளிட்ட நோய்த்தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கும், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழுமையான ஊரடங்கும் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதில் சென்னை உள்ளிட்ட தொற்று பாதித்த மாவட்டங்களில் ஜூலை 5-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) இருந்ததால் பொதுமக்கள் மறுநாள் தளர்வு அறிவித்தவுடன், அடுத்தடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கா? அல்லது எப்போதும்போல் தளர்வு உண்டா எனக் குழப்பத்தில் உள்ளனர்.
அரசு ஊரடங்கு அறிவித்த அன்றே அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும் முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி ''ஜூலை 12, ஜூலை 19 மற்றும் ஜூலை 26 என அடுத்துவரும் மூன்று ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதத் தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.
(அதாவது, 12/7 நள்ளிரவு 12 மணி முதல் 14/7 திங்கட்கிழமை காலை 6 மணி வரையிலும், எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். அதேபோன்று, மற்ற ஞாயிற்றுகிழமைகளும் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்).
நாளை (12/7) பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.
ஆகவே, நாளை எவ்வித அத்தியாவசியத் தேவைக்கும் அனுமதி இல்லை. பொதுமக்கள் மருத்துவக் காரணமன்றி வேறு அவசியத் தேவைகளுக்கும் வெளியில் வந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும், வாகனம் பறிமுதல் செய்யப்படும். மருத்துக் கடைகள் தவிர மற்ற கடைகளைத் திறந்து வைத்தால் சீல் வைக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT