Published : 11 Jul 2020 07:28 PM
Last Updated : 11 Jul 2020 07:28 PM
தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஓரளவு கட்டுப்படியான வருவாயை ஈட்டி வந்த பயிர்களில் மக்காச்சோளமும் ஒன்று. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அந்தப் பயிரையும் அமெரிக்கன் படைப்புழு கடுமையாக அழித்து, விவசாயிகளை நஷ்டத்தில் தள்ளி வருவதால் மக்காச்சோளம் பயிரிடுவதில் விவசாயிகள் சுணக்கம் காட்டி வருகின்றனர்.
அமெரிக்கன் படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிரில் அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக குப்பயன்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்கன் படைப்புழு கண்காணிப்பு திடலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எம்.சிவக்குமார் இன்று (ஜூலை 11) ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:
"அமெரிக்கன் படைப்புழுக்கள் அந்துப் பூச்சிகளால் உருவாகின்றன. ஒரு தாய் அந்துப்பூச்சி சுமார் 1,000 முட்டைகளை இடக்கூடிய திறன் உடையது. இவை, 400 கிலோ மீட்டர் வரை இடம்பெயரும். முட்டையிலிருந்து இரண்டு மூன்று நாள்களில் பிறக்கும் புழுக்கள், வளர்ந்து சில நாள்களில் கூட்டுப்புழுவாக மாறும். மண்ணை இடமாகக் கொள்ளக்கூடியவை இக்கூட்டுப் புழுக்கள். பின்னர் அந்துப்பூச்சிகளாக மாறுகின்றன.
பாதிப்பைக் கட்டுப்படுத்த இயற்கை முறையே சிறந்த தீர்வு. இவ்வகை புழுக்கள் நம் நாட்டுக்குப் புதுமையானவை என்பதால் அதிக வீரியமுள்ள மருந்துகளைப் பயன்படுத்தும்போது மருந்தின் வீரியத்தை ஏற்று வாழும் தன்மையைப் பெற வாய்ப்பு உள்ளது.
எனவே, படைப்புழுவில் இருந்து மக்காச்சோளப் பயிரைப் பாதுகாக்க சூரிய விளக்குப் பொறி மற்றும் இனக்கவர்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், இயற்கை பூச்சி விரட்டிகளையும் பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் பூச்சி மருந்து விற்பனை நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது".
இவ்வாறு சிவக்குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT