Published : 11 Jul 2020 07:25 PM
Last Updated : 11 Jul 2020 07:25 PM
திருவையாறு அருகே பாசன வாய்க்காலில் தண்ணீர் விடாத காரணத்தால், நாற்றங்கால் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருவதைப் பார்த்து வேதனையடைந்த விவசாயிகள் இன்று காலை தஞ்சாவூர் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் விதை நெல்லைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவையாறு அருகே கண்டியூர், காட்டுக்கோட்டை, நடுக்காவேரி, திருப்பூந்துருத்தி உள்ளிட்ட 15 கிராமங்களில் குடமுருட்டி ஆற்றிலிருந்து திருவலாம்பொழில் வாய்க்கால், சங்கராகுளம் வாய்க்கால், திருத்துக்கல் வாய்க்கால், கண்டியூர் வாய்க்கால் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், குறுவை சாகுபடிக்காக கல்லணையிலிருந்து ஜூன் 16-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து, கண்டியூர் பகுதி விவசாயிகளும் குறுவை சாகுபடி பணியைத் தொடங்கினர். இதற்காக பம்பு செட் மூலம் சுமார் 2,000 ஏக்கரில் நடவு செய்ய 100 ஏக்கரில் நாற்றங்கால் தயாரிக்கப்பட்டு விதைகளைத் தெளித்தனர்.
ஆனால், வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் இளம் நெற்பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் அருகில் உள்ள அடிபம்புகளிலிருந்து குடம், வாளிகளில் தண்ணீர் பிடித்து வந்து நாற்றங்காலில் ஊற்றினர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் இன்று (ஜூலை 11) தஞ்சாவூர் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்துக்கு விதை நெல் மூட்டைகளுடன் வந்தனர்.
இதற்கிடையில் நேற்று (ஜூலை 10) பொதுப்பணித்துறை மூலம் கண்டியூர் பாசன வாய்க்கால் நாற்றங்கால் மேடான பகுதி மற்றும் சம்பா சாகுபடி பகுதி எனக் குறிப்பிட்டு பத்திரிகை செய்தி வெளியானது.
அப்போது, "கண்டியூர் வாய்க்கால் மூலம் காலம் காலமாக குறுவை சாகுபடி செய்து வருகிறோம். வருவாய்த்துறையின் ஆவணங்களிலும் குறுவை சாகுபடி செய்து அதற்கான ரசீதுகளைப் பெற்றுள்ள நிலையில், பொதுப்பணித்துறையினர் எப்படி சம்பா சாகுபடி செய்யப்படும் பகுதி எனத் தவறாகக் கூறினர்.
அதே நேரத்தில், கண்டியூர் பகுதியில் குடமுருட்டி ஆற்றில் 2,800 கன அடி தண்ணீர் விட்டால்தான் அனைத்து வாய்க்கால்களுக்கும் தண்ணீர் சென்று பாசனம் செய்ய முடியும். ஆனால், குடமுருட்டி ஆற்றில் 1,000 கன அடி மட்டுமே தண்ணீர் செல்வதால், வாய்க்கால்களுக்குத் தண்ணீர் ஏறிப் பாயவில்லை. இதனால் குறுவை சாகுபடியை இதுவரை செய்ய முடியவில்லை.
நாங்கள் விதை நெல்லை வாங்கி வைத்துள்ளோம். ஆனால் இதுவரை வாய்க்கால்களுக்குத் தண்ணீர் விடவில்லை. பொதுப்பணித்துறையினர் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளன" எனக் கூறி விதை நெல்லை பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் வாசலில் கொட்டியும், விதை நெல்லை அள்ளி வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் விவசாயிகளிடம் காவல்துறையினரும், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் எஸ்.அன்பரசன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு தங்களுடைய கோரிக்கை மனுவை வழங்கினர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச் செயலாளர் பி.சுகுமாரன் கூறியதாவது:
"எங்கள் பகுதியில் நான்கு பாசன வாய்க்கால் மூலம் 12 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்து வருகிறோம். இதில் 4,000 ஏக்கர் பம்பு செட் மூலமும், 8,000 ஏக்கர் ஆற்றுப் பாசனத்தையும் நம்பியுள்ளோம். தமிழக அரசு குறுவை சாகுபடிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் 3.50 லட்சம் ஏக்கர் நிர்ணயித்த பரப்பளவில் எங்களது பகுதியும் உள்ளடங்கியுள்ளது. ஆனால், இதுவரை பாசனத்துக்கு வாய்க்காலில் தண்ணீர் விடவில்லை.
அரசின் வாக்குறுதியை நம்பி நாற்றங்கால் தயாரித்தோம். ஆனால், தண்ணீர் இல்லாத காரணத்தால் காய்ந்து வருகிறது. நெற்பயிர் கருகுவதைக் கண்டு மனமுடைந்த விவசாயிகள் அதனைக் காப்பாற்ற பல வழிகளிலும் போராடி வருகிறோம்.
ஆனால், பொதுப்பணித்துறையினர் அந்தப் பகுதி சம்பா சாகுபடி செய்யும் பகுதி எனக் குறிப்பிட்டு எங்களை மேலும் ஆத்திரமடையச் செய்ததால், இன்று அரசு டெப்போக்களில் வாங்கிய விதை நெல்லை கொண்டு வந்து பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கொட்டினோம். இனியும் வாய்க்காலில் தண்ணீர் விடவில்லை என்றால் விவசாயிகளைப் பெருமளவில் திரட்டி பெரும் போராட்டத்தை நடத்துவோம்"
இவ்வாறு சுகுமாரன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT