Published : 11 Jul 2020 07:22 PM
Last Updated : 11 Jul 2020 07:22 PM
கரோனா தொடர்பான தகவல்களைத் தெரிவிப்பது துணைநிலை ஆளுநரின் பணியல்ல என்று புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (ஜூலை 11) கூறும்போது, "புதுச்சேரியில் தொகுதி வாரியாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. வரும் காலத்தில் கரோனா பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என முதல்வரிடம் கூறி வந்தேன். நாளை முகூர்த்த நாள் என்பதால் அதற்கு அடுத்த வாரம் முதல் ஊரடங்கை அமல்படுத்துவது நல்லது என்று சுகாதாரத்துறை மூலம் முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
நாடு முழுவதும் தினமும் சுகாதாரத்துறை அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலாளர்கள், ஆட்சியர்கள் அல்லது சுகாதாரத்துறை இயக்குநர்கள் கரோனா தொடர்பான தகவல்களை தெரிவிக்கின்றனர். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி 2, 3 முறை கரோனா தொடர்பான தகவல்களைத் தவறாகக் கூறினார். இது துணைநிலை ஆளுநரின் பணியல்ல. ஆளுநர் கிரண்பேடி அவரது பணியைச் செய்ய மாட்டார். மற்றவர்களின் பணிகளில் தலையிடுவதே அவரது நோக்கம். மக்கள் பணியில் ஆளுநருக்கு அனுபவம் கிடையாது. அவருக்கு 4 ஆண்டுகள்தான் அனுபவம் உள்ளது. ஆனால், எனக்கு 31 ஆண்டுகள் மக்கள் பணியில் ஈடுபட்ட அனுபவம் உள்ளது.
எது மக்களுக்குத் தேவையோ, அதனைச் செய்ய நான் யோசனை செய்கிறேன். நீங்கள் (ஆளுநர் ) 4 ஆண்டுகளாக புதுச்சேரியைக் கெடுத்துவிட்டீர்கள். உங்களால் புதுச்சேரி நிலைமையே மாறிவிட்டது. நான் 24 மணி நேரம் வேலை செய்கிறேன். எவ்வளவு பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று ஆளுநர் சொல்லத் தேவையில்லை. இது உங்களது பணி இல்லை.
புதுச்சேரியை எப்படி முன்னேற்றுவது என்று பாருங்கள். இந்தியாவில் எந்த ஆளுநரும் இப்படியெல்லாம் கூறுகிறார்களா என்று பாருங்கள். உங்களுக்கு என்று ஒரு சட்டம் கிடையாது. அனைத்து ஆளுநர்களுக்கும் ஒரே சட்டம்தான். ராஜ்நிவாஸில் ஒருவருக்குத் தொற்று என்று கூறிறேன். அது இல்லை என்று ஆளுநர் மறுத்துக் கூறுகிறார். இது தவறில்லை. ஆனால், பொய்யான தகவலை மக்களுக்குத் தெரிவிக்கிறார்.
பொறுப்புள்ள ஒரு பதவியை பிரதமர் கொடுத்துள்ளார். அதன் வழியில் செயல்படுங்கள். உங்களைப் பற்றி அனைத்தும் புதுச்சேரி மக்களுக்குத் தெரிந்துவிட்டது" என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT