Published : 11 Jul 2020 05:59 PM
Last Updated : 11 Jul 2020 05:59 PM
மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடி கடன் திட்டத்தில், கோவை மண்டலத்தில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.கே.செல்வகுமார் கூறினார்.
இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் இன்று (ஜூலை 11) அவர் கூறியதாவது:
"பிரதமர் மோடி அறிவித்த 'சுய சார்பு பாரதம்' திட்டத்தின் மூலம் தொழில்நுட்பம், டெமோகிராபி பொருளாதாரம், உட்கட்டமைப்பு மேம்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட ஐந்து வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்காக ஐந்து கட்டங்களாக மொத்தம் ரூ.20 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி, ஓ.பி.சி. என அனைத்துப் பிரிவினருக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
லண்டனில் அம்பேத்கர் வசித்த வீடு மத்திய அரசால் வாங்கப்பட்டுள்ளது. எஸ்.டி., எஸ்.சி., சமூக மாணவர்கள் மேல்படிப்புக்காக லண்டன் செல்லும்போது அந்த வீட்டில் தங்கிப் படிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் 52 சதவீதம் ஓ.பி.சி. பிரிவினர். அவர்களுக்காக 27 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏழைப் பெண்களுக்கு 38 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
கோவை மண்டலத்திற்கு உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடிக்கும் மேல் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய பாஜக ஆட்சியில், தமிழகத்தின் நலனுக்காகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தமிழர்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது, விவசாயத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு தலா ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டம் எனப் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய பாஜக அரசு ஒருபோதும் இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யாது".
இவ்வாறு ஜி.கே.செல்வகுமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT