Published : 11 Jul 2020 05:40 PM
Last Updated : 11 Jul 2020 05:40 PM
பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காய்கனி, மளிகைக் கடைகள், இறைச்சி மற்றும் மீன் அங்காடிகளில் கண்காணிக்க கோட்ட உதவிப் பொறியாளர் தலைமையில் 81 சந்தை ஒழுங்குபடுத்தும் குழுக்களும், வட்டாட்சியர்கள் தலைமையில் 32 கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“தமிழ்நாடு அரசால் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவை மற்றும் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் ஒருசில பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி சில கட்டுப்பாடுகளுடன் காய்கனி அங்காடிகள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் காய்கனி, மளிகைக் கடைகள், இறைச்சி, மீன் அங்காடிகள், தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு கடைகள் ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகள் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றனவா எனக் கண்காணிக்க சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசியத் தேவைகளுக்காக நாள்தோறும் அதிகம் கூடும் இடங்களான காய்கனி அங்காடிகள், மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் அங்காடிகள் ஆகிய இடங்களில் வைரஸ் தொற்று பரவுதலைத் தடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி 81 சந்தைப் பகுதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சியின் கோட்ட உதவிப் பொறியாளர் (அ) இளநிலைப் பொறியாளரைத் தலைவராகக் கொண்டு காவல்துறை அலுவலர், மீன்வளத்துறை சார்பில் மீன்வள சுகாதார ஆய்வாளர், சம்பந்தப்பட்ட மார்க்கெட்டைச் சார்ந்த பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய 81 சந்தை ஒழுங்குபடுத்தும் குழு (Market Regulating Committee) அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுக்கள் சரியான முறையில் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றும் வகையில் பணிகள் ஒருங்கிணைக்கப்படும். இந்தச் சந்தைப் பகுதிகளில் சரியான முறையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், அனைத்துக் கடைகளிலும் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வருதலைக் கண்காணித்தல் மற்றும் அனைத்துக் கடைகளிலும் கைகளைச் சுத்தம் செய்ய கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளதா எனக் கண்காணித்தல் போன்றவற்றை மேற்பார்வையிட வட்டாட்சியர்கள் தலைமையில் 32 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுவில் வட்டாட்சியர், சிறப்பு வட்டாட்சியர், துணை வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர் இடம்பெறுவார்கள். இந்தக் குழுவானது தங்கள் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மார்க்கெட் மற்றும் அங்காடிகளைக் கண்காணித்து விதிமீறல்கள் இருப்பின் அந்த மார்க்கெட்/அங்காடிகளை அபராதத்துடன் 14 நாட்களுக்கு மூடி சீல்வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அனைத்து மார்க்கெட் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து கண்காணிக்கப்படும். சந்தை ஒழுங்குபடுத்தும் குழுவானது அந்த வார்டு உதவிப் பொறியாளரால் தொடர்ந்து வழிநடத்தப்படும். பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்படும் பாதுகாப்பு வழிமுறைகளை அனைத்து மார்க்கெட் மற்றும் அங்காடிகளைச் சார்ந்த பிரதிநிதிகள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் உணவு விடுதிகள், ஹோட்டல்கள், வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் பல்வேறு அங்காடிகளைச் சார்ந்த பிரதிநிதிகளுடன் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அங்காடிகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விரிவான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு அவர்களுக்கு விரிவான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்று ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்”.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT