Published : 11 Jul 2020 03:40 PM
Last Updated : 11 Jul 2020 03:40 PM

நீதிமன்ற உத்தரவை மீறி ஊழியர் பணியிடை நீக்கம்: தருமபுரி சுகாதாரத் துறை அதிகாரி காணொலிக் காட்சி மூலம் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

சுகாதாரத் துறை ஊழியர் பணி நியமனம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவைப் புறக்கணிக்கும் வகையில் செயல்பட்ட தருமபுரி மாவட்ட சுகாதாரப் பணிகள் துறையின் துணை இயக்குனர் காணொலிக் காட்சி மூலம் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் கரியப்பனஹள்ளியைச் சேர்ந்த எல்.சின்னதம்பி என்பவர் சுகாதாரத் துறையில் மஸ்தாராக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வந்தார். தன்னைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி அவர் அளித்த விண்ணப்பத்தை நிராகரித்து, தருமபுரி மாவட்ட சுகாதார பணிகள் துறையின் துணை இயக்குனர், 2011 ஜூன் 13-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சின்னதம்பி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2006-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பணியில் இருந்ததைக் கணக்கில் கொண்டு, அவரைப் பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்க 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்பின்னர் சின்னதம்பி கோரிக்கையைப் பரிசீலித்த துணை இயக்குனர் மீண்டும் நிராகரித்து 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து, துணை இயக்குனருக்கு எதிராக நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரபட்ட நிலையில், சின்னதம்பியைக் களப் பணியாளராக நியமித்து 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் துணை ஆணையர் உத்தரவிட்டார். பணி நியமனம் வழங்கிவிட்டதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் சின்னதம்பியை மீண்டும் பணிநீக்கம் செய்து கடந்த மார்ச் 13-ம் தேதி துணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சின்னதம்பி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.பார்த்திபன், நீதிமன்ற உத்தரவைப் புறக்கணிக்கும் வகையில் துணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அவர் ஜூலை 15-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், எந்த அடிப்படையில் பணிநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதை எழுத்துபூர்வமாகப் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x