Published : 11 Jul 2020 02:37 PM
Last Updated : 11 Jul 2020 02:37 PM
மேல்மலையனூருக்கு பாண்டியர் ஆட்சிக்காலத்தில் 'ராஜேந்திரசோழ நல்லூர்' என்ற பெயர் வழங்கப்பட்டுளதாக, இராஜ நாராயண பெருமாள் கோயில் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளதாக வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள இராஜ நாராயணப் பெருமாள் கோயிலில் தென்புற அதிட்டானத்தில் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளதாக விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
"கண்டறியப்பட்ட இக்கல்வெட்டில் மூன்றாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 30-வது ஆட்சியாண்டில் அதாவது, கி.பி. 1298-ம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு சோழர் ஆட்சி முடிந்து, பாண்டியர் ஆட்சி வந்தபோது இக்கோயில் கட்டப்பட்டதைத் தெரிவிக்கின்றது.
கல்வெட்டில் இவ்வூர் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தின் பல்குன்றக் கோட்டத்தில், உத்தம சோழ வளநாட்டில் சிங்கபுர நாட்டில் மலையனூர் அமைந்திருந்ததைக் குறிப்பிடுகிறது. மலையனூர் என்ற பெயர் பாண்டியர் காலத்தில் வழங்கப்பட்டதைக் கல்வெட்டு கூறுகிறது.
மேலும், 'ராஜேந்திரசோழ நல்லூர்' என்ற பெயரும் மலையனூருக்கு இருந்ததைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இவ்வூரைச் சேர்ந்த மாடமுடையான் காமன் பெருங்கன் எதிரி சோழ பல்லவரையன் என்பவர், இராஜ நாராயண பெருமாள் கோயில் கட்டியதைக் கல்வெட்டு கூறுகிறது.
'சிங்கபுரம்' என்பது தற்போது 'சிங்கவரம்' என்று அழைக்கப்படுகிறது. கல்வெட்டின் மூலம் பாண்டியர் காலத்தில் பெருமாள் கோயில் கட்டப்பட்டதையும் அக்காலத்தில் இருந்த நாட்டுப் பிரிவுகள் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. சோழர் காலம் தொடங்கி பாண்டியர் காலத்திலும் தற்காலம் வரை மலையனூர் என்ற பெயர் 1000 ஆண்டுகளாக தற்போது வரை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது".
இவ்வாறு ரமேஷ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT