Published : 11 Jul 2020 07:52 AM
Last Updated : 11 Jul 2020 07:52 AM
தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பான பணிக்காக வழங்கப்படும் மதிப்பூதியம் கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதியர்கள் உயிர்வாழ்வதை காட்ட நேரிலோ அல்லது உயிர்வாழ் சான்றிதழையோ அளிக்க தேவையில்லை என்றும் நிதித் துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்களின் சிறப்பான பணிக்காக பதவியின் அடிப்படையில் மதிப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு அரசு அதிகாரிகள் கமிட்டி, கழகம், நிபுணர் குழு மற்றும் ஆணையங்களில் அவர்கள் வழக்கமான பணிகளை தாண்டி தலைவர் மற்றும் உறுப்பினராக பணியாற்றி வருகின்றனர். இதற்காக தனியான மதிப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது கரோனா காரணமாக ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை கருத்தில் கொண்டு செலவின குறைப்பு அடிப்படையில், இவர்ளுக்கான மதிப்பூதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், மதிப்பூதியம் வழங்கப்படாது. அதேநேரம் மதிப்பூதிய தொகை ஏற்கெனவே செலுத்தப்பட்டிருப்பின் அதை திரும்ப பெற அவசியம் இல்லை என்று தமிழக நிதித் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் தெரிவித்துள்ளார்.
உயிர்வாழ் சான்றிதழ்
தமிழக அரசில் இருந்து ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் தங்கள் வாழ்நாள் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது கரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டுக்கு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நேரிலும் ஆஜராக அவசியம் இல்லை என்று தமிழக நிதித் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT