Published : 11 Jul 2020 07:21 AM
Last Updated : 11 Jul 2020 07:21 AM
தமிழக கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ‘ஜல் ஜீவன் மிஷன் திட்டம்’ தொடர்பாக அடித்தளமே இல்லாத குற்றச்சாட்டை ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மனிதனின் அடிப்படை உயிர்த் தேவையான குடிநீரை, ஒவ்வொரு குடிமகனுக்கும் குறைவில்லாமல் தருவதற்காக நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தி வரும் ‘ஜல் ஜீவன் மிஷன்’ என்ற திட்டத்தை ‘ஜல் சக்தி மிஷன்’ என்று அறிக்கை விட்டிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். பெயரையே தெளிவாக சொல்லத் தெரியாமல், குற்றம் கண்டுபிடித்துள்ளதாக தனது நிர்வாக அறியாமையை காட்டியுள்ளார்.
ரூ.10 லட்சத்துக்குமேல் செலவிடும் திட்டங்களுக்கு மின்னணு ஒப்பந்தப்புள்ளி மூலமே ஒப்பந்தம் கோரப்படும் என்ற விஷயம் தெரியாமல், ரூ.20 லட்சத்துக்கு மேலான திட்டங்களை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏன் தரவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊரக வளர்ச்சித் துறையை பொறுத்தவரை மத்திய, மாநில அரசுகளின் நபார்டு, பிஎம்ஜிஎஸ்ஒய் உள்ளிட்ட திட்டங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மாவட்ட அளவிலேயே கோரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வழிமுறைப்படியே ஜல் ஜீவன் மிஷன் பணிகளுக்கும் ஒப்பந்தப்புள்ளிகள் மாவட்ட அளவிலேயே கோரப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, மாநில அளவில் தலைமைச் செயலர் தலைமையில் ஒரு குழுவும், மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் ஒரு குழுவும் அனைத்து பணிகளையும் கண்காணித்து வருகின்றன. இப்பணியை ஊரக வளர்ச்சித் துறையும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் இணைந்து செயல்படுத்துகிறது.
உள்ளாட்சிப் பகுதிகளில் குடிநீர் வழங்க கடந்த 9 ஆண்டுகளில் ரூ.39,849 கோடி ஒதுக்கப்பட்டு, 2 கோடியே 22 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ஊரக தனி மின்விசை குடிநீர்த் திட்டங்கள், 15 பெரிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள், 70 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மற்றும் 79 நகர குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாட்டிலேயே, தமிழகத்தில்தான், 99 சதவீத ஊரகப் பகுதிகளுக்கு தெரு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை அடித்தளமே இல்லாத ஒரு குற்றச்சாட்டாகும். அவரது அறிக்கையில் உண்மை என்பது ஒரு துளி அளவும் இல்லை. மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் தற்போது குடிநீர் இணைப்பு உள்ள வீடுகள் மற்றும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட வேண்டிய வீடுகள் பற்றிய முழுமையான கணக்கெடுப்பு நடத்தி, ஜல் ஜீவன் மிஷன் திட்டத்துக்கான வலைதளத்தில் அவ்விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி தமிழகத்தில் 12,525 கிராம ஊராட்சிகளில் உள்ள 1 கோடியே 26 லட்சத்து 89 ஆயிரத்து 45 வீடுகளில், 21 லட்சத்து 80 ஆயிரத்து 13 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 கோடியே 5 லட்சத்து 9 ஆயிரத்து 32 வீடுகளுக்கு 2024-ம் ஆண்டுக்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.2,374 கோடியே 74 லட்சத்துக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
தமிழகத்தின் நீர்மேலாண்மைத் திட்டங்களை மனம் திறந்து வாழ்த்தும் பெருந்தன்மை இல்லாத எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், குற்றம் சுமத்துவது, ஆதாரமில்லாமல் அவதூறுகள் பரப்புவது, கோர்ட்டுக்கு போவேன் என்று மிரட்டுவது, சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளை பழி வாங்குவோம் என அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது வேதனைக்குரியதாகும், என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT