Published : 10 Jul 2020 09:59 PM
Last Updated : 10 Jul 2020 09:59 PM
சர்வதேச நாடுகள், உள்நாட்டு நகரங்களில் இருந்து கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் மதுரை விமான நிலையம் வழியாக 9, 419க்கும் மேற்பட்ட மக்கள் மதுரை மற்றும் பிற தெற்கு மாவட்டங்களுக்குச் சென்றுள்ளனர்.
மதுரை விமானநிலையத்திற்கு சர்வதேச விமானங்களை இயக்க முடியாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்களை அடுக்கும் மத்திய, மாநில அரசுகள், தற்போது அருகில் உள்ள மற்ற சர்வதேச விமானநிலையங்களை தவிர்த்துவிட்டு இந்த ‘கரோனா’ காலத்தில் பல்வேறு உலக நாடுகளில் இருந்து வந்த விமானங்களை தரையிறக்குவதற்கு மதுரை விமானநிலையத்தை பயன்படுத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பழமையான மதுரை விமான நிலையத்திற்கு தற்போது வரை சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கப்படவில்லை.
பன்னாட்டு விமான நிலையம் என்று பெயரில் அழைக்கப்பட்டாலும் துபாய், சிங்கப்பூர், இலங்கை நாடுகளுக்கான விமான சேவை மட்டுமே இருந்து வருகிறது. தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகமானோர் அரபுநாடுகள், ஆசிய நாடுகள் உள்ளிட்ட மற்ற நாடுகளில் அதிகளவில் தொழில் மற்றும் வியாபார ரீதியாக சென்று வருகின்றனர். அதனால், மலேசியா, குவைத் மற்றும் பல்வேறு உலக நாடுகள் மதுரைக்கு விமான சேவை வழங்க தயாராக இருந்தும் இரு நாடுகளுக்கான விமான சேவை ஒப்பந்த பட்டியலில் மதுரை விமான நிலையத்தை சேர்க்காமல் மத்திய அரசு முன்வராமல் உள்ளது.
அதேநேரத்தில் நாட்டின் பிற நகரங்களில் உள்ள சிறிய விமான நிலையங்கள் கூட இந்த இரு நாடுகளுக்கான விமானசேவை ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இதுபற்றி இதுவரை உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் மதுரைக்காக குரல் எழுப்பவில்லை.
மதுரை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு நகரங்களை பொறுத்தவரையில் ராஜமுத்திரி, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, கொச்சின், டெல்லி மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானசேவை நடக்கிறது.
உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து ஆண்டிற்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்டார் மதுரை விமானநிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இன்னும் பல நாடுகளுக்கு விமான சேவை அதிகரித்தால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும், ஆனால், அருகில் உள்ள மற்ற நகரங்களின் விமானசேவை பாதிக்கப்படும் என்பதால் அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதாக உள்ளூர் தொழில் முனைவோர் கவலைத் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் வழக்கமான காலங்களில் மற்ற நாடுகளில் இருந்து விமானங்களை இயக்குவதற்கு பல்வேறு முட்டுக்கட்டை போடும் மத்திய, மாநில அரசுகள், இந்த நெருக்கடியான ‘கரோனா’ காலத்தில் வெளிநாடுகளில் தவிக்கும் உள்நாட்டினரை அழைத்து வர அருகில் உள்ள மற்ற சர்வதேச விமானநிலையங்களை தவிர்த்துவிட்டு மதுரை விமானநிலையத்தில் அதிகளவு சிறப்பு சர்வதேச விமானங்களை தரையிறக்குவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் மதுரை விமானநிலையத்தில் வெளிநாடுகள், பிற மாநிலங்கள், நகரங்களில் இருந்து 104 விமானங்கள் தரையிறங்கியுள்ளன. இதில் 9, 419 பயணிகள் மதுரை வந்து தென் மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் சென்றுள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து 555 பேரும், கோலாலம்பூரில் இருந்து 177 பேரும், அரபு நாடுகளில் இருந்து 1,037 பேரும், லெபனான் உள்ளிட்ட மற்ற நாடுகளில் இருந்து 587 பேரும் மதுரை விமானநிலையத்திற்கு வந்துள்ளனர்.
நேற்று கூட அபுதாபியில் இருந்து வந்த சிறப்பு விமானம் மூலம் 181 பேரும், மற்றொரு சிறப்பு விமானம் மூலம் 184 பேரும், மாலத்தீவில் இருந்து வந்த சிறப்பு விமானம் மூலம் 151 பேரும் மதுரை விமானநிலையத்திற்கு வந்தனர்.
ஏற்கெனவே மதுரையில் ‘கரோனா’ தொற்று வேகமாக பரவும் நிலையில் மக்களுக்கு விரைவாக பரிசோதனை செய்யமுடியாமல் சுகாதாரத்துறையினர் தவிக்கின்றனர். இந்த சூழலில் அதிகளவு சர்வதேச விமானங்களை மதுரையில் தரையிருக்குவதால் அந்த விமானங்களில் வந்து இறங்கும் வெளிநாட்டு பயணிகளை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்று அவர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து ‘கரோனா’ பரிசோதனை செய்தப்பிறகே வீட்டிற்கு அனுப்பி வைக்க முடியும். ஆரம்பத்தில் சுகாதாரத்துறை இதுபோல் வெளிநாடுகளில் இருந்தும், பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வந்தவர்களையும் முறையாக பரிசோதனை செய்யாமல் போன் நம்பரையும், முகவரையும் வாங்கி வைத்துவிட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்ததாலே தற்போது மதுரை முதல் கன்னியாகுமரி வரையிலான தென் மாவட்டங்களில் அதிகளவு ‘கரோனா’ தொற்று சமூக பரவலை அடைந்ததிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
தற்போது மதுரையிலே தொற்று நோயை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் சுகாதாரத்துறையினர் வெளிநாடுகளில் இருந்து விமானநிலையத்தில் தரையிரங்கும் பயணிகள் அனைவரையுமே பரிசோதனை செய்யாமல் வீட்டிற்கு அனுப்பி வைப்பதாகவும், கடமைக்கு மட்டுமே சில விமானங்களில் வந்த பயணிகளை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சாதாரண காலங்களில் மதுரைக்கு சர்வதேச விமானங்களை இயக்க பல்வேறு காரணங்களைக் கூறிய மத்திய, மாநில அரசுகள் இந்த நெருக்கடியான ‘கரோனா’ காலத்தில் அருகில் உள்ள மற்ற சர்வதேச விமானங்களை தவிர்த்து மதுரை விமான நிலையத்தை பயன்படுத்துவது, வெளிநாடுகளில் இருந்து வருவோரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்வது உள்ளிட்ட விஷயங்களை தவிர்க்கவே இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘விமானநிலையத்தில் வந்து இறக்குவோர் அனைவருக்கும் பரிசோதனை செய்தபிறகே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள், ’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT