Published : 10 Jul 2020 05:57 PM
Last Updated : 10 Jul 2020 05:57 PM
கரோனா காலத்தில் பல்வேறு தொழில்கள் கடும் பாதிப்பைச் சந்தித்திருக்கும் நிலையில், விவசாயிகள் மத்தியில் மன நிம்மதியை உருவாக்கியிருக்கிறது மஞ்சள் விளைச்சல்.
கர்நாடகம், மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் 40 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை மஞ்சள் நடவு நடந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்கள் விவசாயிகள். குறிப்பாக, அண்டை மாநிலமான கேரளம், நம்மிடம் 800 டன் விதை மஞ்சளை வாங்கித் தனது விவசாயிகளுக்கு மானிய விலையில் கொடுத்து நடவை ஊக்குவிக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
பொதுவாக, சாதாரண மஞ்சள் பயிரிடும்போது ஒரு ஏக்கருக்கு 15 டன்தான் விளைச்சல் கிடைக்கும். ஆனால், புதிய ரகமான பிரதீபா மஞ்சள், 35 டன் வரை விளையும். அதைத்தான் தன் விவசாயிகளுக்கு வாங்கி வழங்கி வருகிறது கேரளம் என்கிறார் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த மஞ்சள் விவசாயியான ராமமூர்த்தி. இவர் பிரதீபா மஞ்சள் ரகத்தைத் தாய்லாந்துக்கு ஏற்றுமதி செய்த அனுபவம் கொண்டவர்.
தொடர்ந்து இத்தாலி, ரஷ்யாவிற்கு மஞ்சள் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. கரோனா பரவல் காரணமாக அது தடைபட்டு விட்டது. எனினும், அங்கு அனுப்பத் திட்டமிட்டிருந்த மஞ்சளில் 800 டன்னைக் கேரளத்திற்கு அனுப்பி வருமானம் ஈட்டியிருக்கிறார். இது குறித்து அவரிடம் பேசினேன்.
“பிரதீபா மஞ்சளில் 30 - 35 டன் விளைச்சல் கிடைக்குது. நோய்த் தாக்குதல் இல்லாமல் வீரியத்துடன் விளைகிறது. அதைப் பார்த்துவிட்டுத்தான் இந்த மஞ்சளை நம்மிடம் ரூ.40-க்குக் கொள்முதல் செய்து, தனது விவசாயிகளுக்கு மானிய விலையில ரூ.10-க்குக் கொடுக்கிறது கேரள அரசாங்கம். என்னிடமிருந்து மட்டும் 600 டன் அங்கே போயிருக்கிறது. எனது விளைச்சல் போக, மற்ற விவசாயிகளிடமும் இருந்து இந்த மஞ்சளை விலைக்கு வாங்கி கேரளத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.
அடுத்த வருஷம் விளைவிக்க எம்.இ 9-ன்னு ஒரு புது ரகத்தைத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கொடுத்திருக்கிறது. அது போக பிஎஸ்ஆர் 2 ரகமும் கொடுத்திருக்கிறார்கள். கேரளத்துக்கு நான் கொடுத்த விதை மஞ்சள் இந்தியா முழுக்கப் போயிருக்கிறது” என்றவரிடம் மஞ்சள் விற்பனை குறித்தும் விசாரித்தேன்.
“இப்போது மஞ்சள் நல்லாவே விற்பனை ஆகிறது. அடுத்த வருஷம் இன்னும் அதிக விற்பனை நடக்கும். அதனாலதான் கேரள அரசே அங்குள்ள விவசாயிகளை மஞ்சள் பயிரிடச் சொல்கிறது. மஞ்சளில் ‘குர்க்குமின்’ (Curcumin) என்று ஒரு மருந்துப் பொருள் இருக்கிறது. அது ஒரு எண்ணெய்ப் பொருள். 100 கிலோ மஞ்சளை அரைத்து பிராசஸ் செய்தால் 5 அல்லது 6 கிலோ வரை குர்க்குமின் கிடைக்கும். அதை எடுக்கத்தான் அமெரிக்கா உயர்ந்தபட்ச விலை கொடுத்து மஞ்சளை வாங்குகிறது. அதனால அடுத்த வருஷம் மஞ்சளுக்குப் பெரிய டிமாண்ட் ஏற்படும் இதை மனதில் வைத்துத்தான் பரவலாக மஞ்சள் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
கர்நாடகம், மகாராஷ்டிரா, ஒடிசா என எல்லா இடங்களிலும் மஞ்சள் நடவாகுது. தமிழ்நாட்டிலதான் நடவு கம்மி. இங்கே விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் கிடைப்பதில்லை என்பதுதான் காரணம். என்னைப் பொறுத்தவரை என் சொந்த நிலத்தில் 15 ஏக்கர் மஞ்சள் போடுவேன். மஞ்சளுக்கு இருக்கும் கிராக்கியை உணர்ந்து மற்ற விவசாயிகளுக்கும் இந்த வருஷம் 200 ஏக்கருக்கு விதை மஞ்சள் கொடுத்து நடவு செய்ய வச்சிருக்கேன். நமக்கு வர்ற லாபம் அவுங்களுக்கும் வரட்டுமே.
பக்குவப்படுத்தாத, காய வைக்காத பச்சை மஞ்சளை வெளிநாட்டு நிறுவனங்களே நேரடியாகக் கொள்முதல் செய்கின்றன. ‘விவசாயிகள் ஒருங்கிணைந்து மஞ்சள் விளைச்சல் செய்யுங்க. நாங்களே நேரடியா வந்து வாங்கிக் கொள்கிறோம்’ என்று சொல்கிறார்கள். போன வருஷம் தாய்லாந்துக்கு மஞ்சள் அனுப்பினேன். நேரடியா விவசாயிகளே வந்து பார்த்து வாங்கி விளைய வச்சு இப்ப மருந்து தயாரிச்சிட்டு இருக்காங்க.
அப்புறம் இத்தாலி, ரஷ்யா நாடுகள்ல இருந்து வர்றாங்க. 300 டன் ஆர்டர் கொடுத்திருக்காங்க. கரோனா காலம் முடிவுக்கு வந்துட்டா இதை வெளிநாட்டுக்கு அனுப்புவோம். இல்லைன்னாலும் பரவாயில்லை. நம்ம நாட்டுக்கே இதுக்கு ரொம்ப தேவையிருக்கு” என்றார் ராமமூர்த்தி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT